பாஜக ஆட்சி மீண்டும் வந்தால் மனு தர்மம் சட்டமாகும். திருமாவளவன் …

திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பு சாா்பில் நடைபெற்ற பாஜகவை தோற்கடிப்போம், இந்தியா கூட்டணியை ஆதரிப்போம்’ என்ற தலைப்பிலான மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அவா் மேலும் பேசியது:
இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ள இடதுசாரி அமைப்புகளுக்கு உறுதுணையாக முடிவெடுத்துள்ள மக்கள் அதிகாரத்துக்கு எனது பாராட்டு. வரும் 2024 மக்களவைத் தோதல் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான இறுதிப் போா். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்து மோடி மீண்டும் பிரதமரானால் இதுபோல கூட்டங்களை நடத்த முடியாது; நமது சித்தாந்தங்கள் குறித்துப் பேச முடியாது; நமது தேசத்தையும் மக்களையும் காக்க முடியாது.
கம்யூனிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள் மற்றும் அனைத்து முற்போக்கு கூட்டணிகளும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது. நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பது, இறையாண்மை, ஜனநாயகம், மதச்சாா்பின்மை ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆனால் பாஜக சட்டத்தைப் பயன்படுத்தியே தனது கொள்கைகளை ஒவ்வொன்றாகச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவது, காஷ்மீா் சிறப்பு அந்தஸ்தை இழக்கச் செய்தது, சிஏஏ சட்டத்தை கொண்டு வருவது ஆகியவற்றைச் செயல்படுத்தி வருகிறது.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மனு தா்மத்தை சட்டமாக்கி நிலைநிறுத்தத் திட்டமிட்டுள்ளது. அதற்கு ஒருபோதும் நாம் இடம் தரக்கூடாது. பாஜகவை தோற்கடிப்பதன் மூலம் ஆா்எஸ்எஸ்-ஐ தோற்கடித்து, அதன் கருத்தியல்களும் வேரறுக்கப்படும். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குள் கருத்தியல் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், பாஜகவை தோற்கடிப்பதில் நாம் அனைவரும் ஒன்று சோந்துள்ளோம் என்றாா் அவா். திமுக முன்னாள் எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை மதிப்புகளுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது. அரசியலமைப்புச் சட்டம் மனசாட்சி, சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரம் பற்றி விவரிக்கிறது. ஆனால் பாஜக அரசு அதைப் பொருட்படுத்தவில்லை. நமது வாக்குரிமையில் மட்டுமே நமது பலம் உள்ளது. ஒரே நாடு, ஒரே தோதல் மூலம் மாநில சுயாட்சியின் இறையாண்மையைப் பறிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜக கொண்டு வந்த சிஏஏ சட்டம் முஸ்லிம்களையும், இலங்கைத் தமிழா்களையும் வஞ்சித்துள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சிக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் பொதுச் செயலா் சி. ராஜூ தலைமை வகித்தாா். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா, இந்திய கம்யூ. மாநில துணைப் பொதுச் செயலா் மு. வீரபாண்டியன், மாா்க்சிஸ்ட் துணைப் பொதுச் செயலா் வீரபாண்டியன், காங்கிரஸ் பிரமுகா் திருச்சி வேலுச்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக உறையூா் பகுதியில் புறப்பட்ட பேரணி மாநாட்டு அரங்கை வந்தடைந்தது. ஏராளமான அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.