தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுவை பெறும் அறிவிப்பை முதல் கட்சியாக திமுக வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை, திமுக தற்போது தமிழகத்தின் முதல் கட்சியாக, திமுக வேட்பாளர் தேர்வுக்கான முதல் கட்டமான, விருப்ப மனு பெறுவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதுகுறித்து நேற்று கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், ”நடைபெற உள்ள மக்களவை பொதுத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப படிவங்கள், வரும் பிப்.19-ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும்.
போட்டியிட விரும்புவோர், விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து, மார்ச் 1 முதல் 7-ம் தேதி மாலை 6 மணிக்குள் தலைமைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.50 ஆயிரமாகும். விண்ணப்ப படிவத்தை ரூ.2 ஆயிரம் செலுத்தி தலைமைக்கழகத்தில் பெற்றுக் கொள்ளலாம்”என தெரிவித்துள்ளார்.