டெல்லி: வந்தே பாரத் ரயில்களில் இதுவரை சுமார் 1 கோடியே 11 லட்சம் பேர் பயணித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நெல்லை- சென்னை உட்பட நாட்டின் 9 புதிய வந்தே பாரத் ரயில்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: ஒன்பது வந்தே பாரத் ரயில்களின் தொடக்கம் என்பது நாட்டின் நவீன இணைப்பில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நடைபெற்ற நிகழ்வு. நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியின் அளவு மற்றும் வேகம் 140 கோடி இந்தியர்களின் லட்சியத்துடன் சரியாக பொருந்துகிறது.
இன்று தொடங்கப்பட்ட ரயில்கள் மிகவும் நவீனமானவை மற்றும் வசதியானவை.இந்த வந்தே பாரத் ரயில்கள் புதிய இந்தியாவின் புதிய உற்சாகத்தின் அடையாளங்கள் என்றும் அவர் பெருமிதம். வந்தே பாரத் ரயில்களில் ஒரு கோடியே 11 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளனர். வந்தே பாரத் ரயில்கள் மீதான மோகம் அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
25 ப்ளஸ் 9 வந்தே பாரத் ரயில்கள்: பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 25 வந்தே பாரத் ரயில்கள் சேவையாற்றி வருகின்றன. இன்று மேலும் 9 வந்தே பாரத் ரயில்கள் அந்த சேவையில் இணைகின்றன. வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் இணைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. நேரத்தை மிச்சப்படுத்தவும், ஒரே நாளில் பயணத்தை மேற்கொள்ளவும் விரும்பும் மக்களுக்கு வந்தே பாரத் ரயில்கள் உபயோகமாக இருக்கின்றன. வந்தே பாரத் ரயில்களால் இணைக்கப்பட்டுள்ள இடங்களில் சுற்றுலா அதிகரித்து, பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்க வழிவகுக்கப்பட்டுள்ளன.
மகளிர் இடஒதுக்கீடு சட்டம்: நாட்டின் நம்பிக்கை, நம்பிக்கை நிறைந்த சூழலில் நாட்டின் சாதனைகள் குறித்து ஒவ்வொரு குடிமகனும் பெருமிதம் அடைகின்றனர். ஜி 20 வெற்றி இந்தியாவின் ஜனநாயகம், மக்கள்தொகை மற்றும் பன்முகத்தன்மையின் வலிமையை வெளிப்படுத்தியுள்ளது. மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்னெடுப்பதற்கான ஒரு தீர்க்கமான தருணம். பல ரயில் நிலையங்கள் பெண் அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகின்றன.நம்பிக்
ரயில்வே பட்ஜெட், பாரத் ரயில் நிலையங்கள்: ரயில்வேக்கான இந்த ஆண்டு பட்ஜெட் என்பது 2014 ஆம் ஆண்டின் ரயில்வே பட்ஜெட்டை விட 8 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இரட்டை ரயில்பாதைகள், மின்மயமாக்கல் மற்றும் புதிய வழித்தடங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன . ரயில் பயணிகளின் வசதிக்காக நாட்டில் அதிக எண்ணிக்கையிலான நடைமேம்பாலங்கள், மின் தூக்கிகள், மின் படிக்கட்டுகள் கட்டப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு, நாட்டின் 500 க்கும் மேற்பட்ட முக்கிய நிலையங்களை மறுசீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. சுதந்திர தின அமுத பெருவிழாவின் போது கட்டப்பட்ட இந்த புதிய நிலையங்கள் சுதந்திர தின அமுத பெருவிழா பாரத் நிலையங்கள் என்று அழைக்கப்படும். இந்த நிலையங்கள் வரும் நாட்களில் புதிய பாரதத்தின் அடையாளமாக மாறும்.
கோவை ரயில் நிலையம்: கோவை ரயில் நிலையம், 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இப்போது ரயில் நிலையங்கள் தொடங்கப்பட்ட நாளைக் கொண்டாடும் இந்த பாரம்பரியம் மேலும் விரிவுபடுத்தப்படும், மேலும் அதிகமான மக்கள் இதில் ஈடுபடுவார்கள். ஒரே பாரதம் சிறப்பான பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை உறுதியின் மூலம் சாதிப்பதற்கான வழிமுறையாக நாடு மாற்றியுள்ளது. 2047 க்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய, ஒவ்வொரு மாநிலத்தின் மற்றும் ஒவ்வொரு மாநில மக்களின் வளர்ச்சி அவசியம்.
தூய்மை இந்தியா திட்டம்: இந்திய ரயில்வே மற்றும் சமூகத்தில் ஒவ்வொரு மட்டத்திலும் நிகழும் மாற்றங்கள் வளர்ந்த இந்தியாவை நோக்கிய ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அக்டோபர் 1 ஆம் தேதி காலை 10 மணிக்கு திட்டமிடப்பட்ட தூய்மை இயக்கத்தில் அனைவரும் ஈடுபட வேண்டும். சர்தார் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரையிலான காலகட்டத்தில் கதர் மற்றும் சுதேசி பொருட்களை வாங்குவதில் அனைவரும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.