கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் புவனேஸ்வரி (வயது 30) இவர் கடந்த 01.10.2024 அன்று வீட்டை பூட்டி விட்டு அவரது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10பவுன் தங்க நகைகளை காணவில்லை.யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். கார்த்திகேயன். உத்தரவிட்டார் இதன் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. இதில் கோவை சூலூர்பக்கம் உள்ளகாளிபாளையம் பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து மகன் செந்தில்குமார் என்ற பால்கார செந்தில்(வயது54) மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் செந்தில்குமாரை கைது செய்து அவரிடமிருந்து மேற்படி வழக்கில் திருட்டுச் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றும் நெகமம் காவல் நிலைய பகுதியில் திருட்டு வழக்கில் தொடர்புடைய இருசக்கர வாகனம்-1 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்,மேற்படி எதிரி பெரியநாயக்கன்பாளையம், சூலூர், போத்தனூர், சிங்காநல்லூர் மற்றும் அவிநாசி பாளையம் காவல் நிலைய குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. கொள்ளையன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.