கோவை வடவள்ளி அருகே உள்ள ராஜம்மா நகரை சேர்ந்தவர் சத்தியதேவ் இவரது மனைவி லட்சுமி பிரபா ( வயது 36) இவர் தனது குழந்தையுடன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் 2 பேர் வந்தனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் லட்சுமி பிரபா கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
சுண்ட பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி உமாதேவி (வயது 27) இவர் தனது மொபட்டில் 2 குழந்தைகளை ஏற்றிக் கொண்டு கெம்பனூரில் உள்ள தோழி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 ஆசாமிகள் திடீரென மாதவி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றுவிட்டனர்.
சோமையனூர் அருகே உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி மேகலா ( வயது 50 )இவர் அந்த பகுதியில் உள்ள கம்பெனிக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தார். வேலை முடிந்ததும் பஸ் ஏறுவதற்காக பஸ் நிறுத்தத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் கண் இமைக்கும் நேரத்தில் மேகலா கழுத்தில் 4 பவுன் தங்கச் செயினை கொள்ளையடித்து சென்று விட்டனர்..
இதேபோல குப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கீர்த்தனா (வயது 24). இவர் கே என்.ஜி.புதூர் ரோட்டில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் வந்த மர்ம நபர்கள் கீர்த்தனா கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்று விட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை அருகே ஒரே நாளில் 4 பெண்களிடம் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தீவிரமாக தேடி வருகிறார்கள்.