ஆகஸ்ட் 1 மற்றும் அக்டோபர் 29 க்கு இடையில் மத்திய அரசு தலா ரூ. 1 கோடி மதிப்புள்ள 10,000 தேர்தல் பத்திரங்களை அச்சிட்டது என்று அந்தத் தேதிகளைக் குறிப்பிட்டு பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) இரண்டு தகவல் அறியும் உரிமைப் (RTI) பதில்கள் தெரிவிக்கின்றன.
இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தல்களுக்கு முன்னதாக, மிக சமீபத்திய தேர்தல் பத்திரங்கள் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 10 வரை விற்பனைக்கு வந்தன.
ஆர்.டி.ஐ ஆர்வலர் கன்ஹையா குமாருக்கு அக்டோபர் 29 அன்று எஸ்.பி.ஐ அளித்த பதிலின்படி, கடைசியாக 2019 ஆம் ஆண்டில், நாசிக்கில் உள்ள இந்தியா செக்யூரிட்டி பிரஸ்ஸில் 11,400 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு மதிப்புகளில் பத்திரங்கள் அச்சடிக்கப்பட்டன.
தேர்தல் பத்திரங்களை விற்க அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே வங்கியான எஸ்.பி.ஐ, அதே பதிலில் ரூ. 1 கோடி மதிப்புள்ள 10,000 தேர்தல் பத்திரங்கள் 2022 காலண்டர் ஆண்டில் அச்சிடப்பட்டதாகக் கூறியது. ஆகஸ்ட் 1, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்கப்பட்ட விவரங்களில் ஒரே முறை தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்கப்பட்டதாக பதில் வழங்கியுள்ளது.
தேர்தல் பத்திரங்களை அச்சிடுவதற்கான செலவினம் கருவூலத்தால் ஏற்கப்பட்டதா அல்லது பத்திரத்தை வாங்குபவரால் ஏற்கப்பட்டதா என்ற கேள்விக்கு, SBI அக்டோபர் 29 ஆம் தேதி அளித்த பதிலில், ‘அதன் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் விற்பனைக்காக, ஸ்டேஷனரியானது, இந்திய அரசிடமிருந்து பெறப்பட்டது (sic).’ என்று கூறியது.
எஸ்.பி.ஐ தனது சமீபத்திய பதிலில் வழங்கிய தரவை மேற்கோள் காட்டி, ஜூலை மாதம் ஒரு தவணை விற்பனைக்குப் பிறகு ரூ. 1 கோடி மதிப்பிலான 5,068 பத்திரங்கள் விற்கப்படாமல் கிடக்கும் போது, அதே மதிப்புள்ள புதிய தேர்தல் பத்திரங்களில் 10,000 ஐ அரசாங்கம் அச்சிட்டதாக கன்ஹையா குமார் கூறினார். 2018 ஆம் ஆண்டு திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, அரசாங்கம் இதுவரை ரூ.1 கோடி மதிப்பிலான 24,650 பத்திரங்களை அச்சிட்டு, அவற்றில் 10,108 ஐ விற்பனை செய்துள்ளது.
பல ஆண்டுகளாக, இந்தத் திட்டத்தில் கிடைக்கும் அதிக மதிப்பான ரூ. 1 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள், அரசியல் கட்சிகளுக்குக் கொடுப்பதற்காகப் பத்திரங்களை வாங்கும் கார்ப்பரேட்டுகள் மற்றும் தனிநபர்களுக்கு மிகவும் பிரபலமான தேர்வாக இருந்து வருகிறது. எஸ்.பி.ஐ.,யின் பதிலின்படி, இதுவரை விற்பனை செய்யப்பட்ட மொத்த தேர்தல் பத்திரங்களின் மதிப்பில் சுமார் 94 சதவீதம் ரூபாய் 1 கோடி மதிப்பிலான பத்திரங்கள் வடிவில் உள்ளன. இந்தத் திட்டத்தில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பத்திரங்களும் அடங்கும். இருப்பினும், இவற்றை குறைவானவர்களே வாங்குகின்றனர்.
2018 ஆம் ஆண்டு முதல் விற்பனையாகாத தேர்தல் பத்திரங்களின் கட்டம் வாரியாக மற்றும் மதிப்பு வாரியான விவரங்களைக் கேட்டதற்கு, அங்கீகரிக்கப்பட்ட கிளைகள்தான் பத்திரங்களை விற்பனை செய்வதால் அந்தத் தகவல்கள் மத்திய அளவில் கிடைக்கவில்லை என்று எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 19 அன்று, இந்திய செக்யூரிட்டி பிரஸ், RTI ஆர்வலர் ஓய்வு பெற்ற கடற்படை உயர் அலுவலர் லோகேஷ் பத்ராவுக்கு அளித்த பதிலில், தேர்தல் பத்திரங்களை அச்சடிக்க அரசாங்கம் இதுவரை 1.85 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாகக் கூறியது. அதுவரை அச்சிடப்பட்ட தேர்தல் பத்திரங்களின் எண்ணிக்கை 6,64,250. சமீபத்தில் அச்சிடப்பட்ட 10,000 ரூபாய் 1 கோடி மதிப்பிலான பத்திரங்கள் குறித்து கன்ஹையா குமாருக்கு எஸ்.பி.ஐ அளித்த ஆர்.டி.ஐ பதிலில் குறிப்பிடப்ப்பட்டுள்ள பத்திரங்கள் இதில் அடங்கவில்லை.
ஜூன் 16 அன்று, மத்திய தகவல் ஆணையம், தேர்தல் பத்திரங்களை அச்சிடுவதற்கான செலவு மற்றும் அதனுடன் தொடர்புடைய செலவுகள் குறித்த விவரங்களை லோகேஷ் பத்ராவிடம் வழங்குமாறு இந்திய பாதுகாப்பு அச்சகத்திற்கு உத்தரவிட்டது. லோகேஷ் பத்ராவின் தகவல்களை வெளியிடுவது நாட்டின் பொருளாதார நலன்களை மோசமாக பாதிக்கும் என்று கூறி, அரசாங்க அச்சகம் முன்னதாக அந்த தகவலை வழங்க மறுத்துவிட்டது.