கோவையை தலைமையிடமாகக் கொண்டு நீலம்பூர் பைபாஸ் ரோட்டில் சத்தியானந்த் நடத்தும் “மைவி3 ஏட்ஸ்” நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் செல்போன் செயலி மூலம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் உறுப்பினராகலாம் என்றும் அந்த செயலியில் வரும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் கமிஷன் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. அத்துடன் அந்த செயலில் வரும் வீடியோவில் வரும் விளம்பரங்களை பார்ப்பதன் மூலம் வருமானம் ஈட்டலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கோவை, திருப்பூர், ஈரோடு ,சேலம், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பொதுமக்கள் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்ட தகவல்களை பதிவு செய்தனர். மேலும் இந்த செயலி பதிவு செய்த ஏராளமானவர்கள் பணமும் செலுத்தி உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர்.இந்த நிலையில் தனியார் நிறுவனத்தினர் மக்களை ஏமாற்றி பணம் வசூலித்து மோசடி செய்வதாக சிலர் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள்தங்கள் நிறுவனம் எந்தவித மோசடியும் செய்யவில்லை என்றும் தனியார் நிறுவனம் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரியும் கோவை அருகே நீலாம்பூரில் அந்த நிறுவனத்தின் முன் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.ஒரே இடத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் திரண்டதால் நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி ராமசாமி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் சத்தியானந்த் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் , போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவின் கீழ் சிங்கநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.