தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் 102 லோக்சபா தொகுதிகளில் இன்று வேட்பு மனுத் தாக்கல்.!!

டெல்லி: தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில் ஏப்ரல் 19-ந் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 102 லோக்சபா தொகுதிகளில் இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27.

17-வது லோக்சபாவின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து 18-வது லோக்சபா தேர்தலுக்கான விரிவான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

18-வது லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. 7-வது கட்ட வாக்குப் பதிவு ஜூன் 1-ந் தேதி நடைபெறும். ஜூன் 4-ந் தேதி அனைத்து தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மேலும் ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், ஒடிஷா மற்றும் சிக்கிம் மாநிலங்களின் சட்ட சபைகளின் பதவிக் காலமும் முடிவடைவதால் இம்மாநிலங்களின் சட்டசபை தேர்தலும் லோக்சபா தேர்தலுடன் நடத்தப்படுகின்றன.

ஏப்ரல் 19-ந் தேதி தமிழ்நாட்டின் 39 லோக்சபா தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 102 தொகுதிகள் விவரம்: தமிழ்நாடு 39, ராஜஸ்தான் 12, உ.பி. 8, ம.பி. 6, அஸ்ஸாம் 5, மகாராஷ்டிரா 5, உத்தரகாண்ட் 5, பீகார் 4, மேற்கு வங்கம் 3, அருணாச்சல பிரதேசம் 2, மணிப்பூர் 2, மேகாலயா 1, புதுச்சேரி 1, லட்சத்தீவுகள் 1, ஜம்மு காஷ்மீர் 1, அந்தமான் நிக்கோபர் 1, திரிபுரா 1, சிக்கிம் 1, நாகாலாந்து 1, மிசோரம் 1, சத்தீஸ்கர் 1

இத்தொகுதிகளில் இன்று முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. 102 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27. இந்த தொகுதிகளில் வேட்புமனுக்கள்ம மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறும். 102 தொகுதிகளிலும் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 30.

பொதுத்தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் டெபாசிட் தொகையாக ரூ25,000 செலுத்த வேண்டும். தனித் தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் செய்வோர் ரூ12,500 டெபாசிட் செலுத்த வேண்டும்.