கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் – 2 பேர் கைது..!

கோவை: குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்திச் செல்வதை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் பூங்கொடி தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று வாளையார் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள சோதனை சாவடியில் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி மற்றும் அதன் பின்னால் வந்த ஒரு ஆட்டோவை சந்தேகத்தின் பெயரில்தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதற்குள் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த மினி லாரி மற்றும் ஆட்டோவில் இருந்த 15 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதை கடத்தி வந்த டிரைவர்களான கோவை சுகுணாபுரத்தைச் சேர்ந்த பெரோஸ் கான் (வயது 35) பாலக்காட்டை சேர்ந்த அய்யப்ப குமார் ( வயது 41 )ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ மற்றும் மினிலாரி பறிமுதல் செய்யப்பட்டது.இந்த வழக்கில் போத்தனூரை சேர்ந்த ஜாகீர்,வாளையார் செந்தில் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர் .. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.