பல்வேறு கட்ட நகர்வுகளுக்கு பிறகு நேற்று இரவு 9:30 மணி அளவில் மாமல்லபுரத்தின் அருகே மாண்டஸ் புயலின் வெளிவட்ட பாதை கரையைக் கடக்கத் துவங்கியது.
இதன் காரணமாக மழையுடன் பலத்த காற்று வீசியது. கிட்டத்தட்ட அதிகாலை 3 மணி அளவில் மாண்டஸ் புயல் முழுவதுமாக கரையைக் கடந்தது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர், ‘இன்று மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயல் வலுவிழக்கக் கூடும். இதன் காரணமாக உள் மாவட்டங்களில் மழை தொடரும்’ எனத் தெரிவித்துள்ளார்.
கரையைக் கடந்த மாண்டஸ் புயலால் சென்னை காசிமேட்டில் 150 படகுகள் சேதமடைந்துள்ளது. 20 படகுகள் கடலில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படகுகள் சேதமடைந்ததால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் கோவளம் கடற்கரை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல படகுகள் சேதம் அடைந்துள்ளதால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
புயல் காரணமாக திருவள்ளூர் ஆவடியில் 17 சென்டிமீட்டர் மழையும், திருத்தணியில் 16 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு, சோழவரம், ஊத்துக்கோட்டை பகுதிகளில் தலா 13 சென்டிமீட்டர் மழை பதிவானது. புயலின் தாக்கம் இருந்த பொழுதும் மெட்ரோ ரயில் தடை இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது