கோவை மாநகர காவல் நிலையங்களில் ‘ஆபரேசன் ரிபியூட்’ என்ற திட்டம் துவங்கப்பட்டு, இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரை, பள்ளியில் 324 இடைநின்றல் மாணவர்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இவர்களில் 173 பேரை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவ மாணவியர்களின், பெற்றோர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மனநல மருத்துவர் மோனி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பெற்றோர்களிடம் கலந்துரையாடினார்.
அதை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:போலீஸ் அக்கா திட்டத்தின் கீழ், பணியாற்றும் காவலர்கள் வாயிலாக 173 குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில், 20 பேர் வெளி மாநிலத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை கோவைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்திற்கு கல்வி துறை அதிகாரிகள் மிக உதவியாக இருந்தனர். குழந்தைகளுக்கு, எதிர்கால வாழ்க்கை மற்றும் வாய்ப்புகளை எடுத்துக்கூறி அவர்களை தொடர்ந்து படிக்க வைக்க திட்டமிட்டுள்ளோம். 3 மாதங்களுக்கு ஒருமுறை,மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தப்படும். ஏழை மாணவர்களுக்கு சீருடை மற்றும் அடிப்படை தேவைக்கான உதவிகள் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.