கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண் .இவர் தனியார் வங்கியில் மக்கள் தொடர்பு மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இணையதள திருமண தகவல் மையம் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த பெண்ணிற்கு வாலிபர் ஒருவர் அறிமுகமானார். அவர் தனது பெயர் ஜாபர் இப்ராஹிம் என்றும், கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் என்றும் மேலும் தற்போது அமெரிக்காவில் டாக்டராக பணிபுரிவதாக தெரிவித்தார் .இதனை உண்மை என்று நம்பி அந்தப் பெண் அவருடன் பழகினார். மேலும் செல்போன் மூலம் தினமும் பேசிவந்தனர். இந்த நிலையில் ஜாபர் இப்ராகிம் தான் ரஷ்யாவில் ஒரு வேலைக்காக வந்ததாகவும், அங்கு பணி முடிந்து உன்னை சந்திப்பதற்காக இந்தியா வர உள்ளதாகவும் தெரிவித்தார் .மேலும் இந்தியா வருவதற்கான விமான டிக்கெட் வாங்க பணம் தேவைப்படுவதாக தெரிவித்தார் .இதனை நம்பி அந்த பெண் அவருக்கு ஆன்லைன் மூலம் அந்த நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு பணம் செலுத்தியுள்ளார் .சம்பத்தன்று ஜாபர் இப்ராஹிம் அந்தப் பெண்ணின் செல்போனில் தொடர்பு கொண்டு தான் டெல்லி விமான நிலையத்திற்கு வந்து விட்டதாகவும் தான் 6.80 லட்சம் அமெரிக்க டாலர் கொண்டு வந்ததால் சுங்க அதிகாரிகள் தன்னை பிடித்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார் .மேலும் இந்த அமெரிக்க டாலருக்கு சுங்க கட்டணம் செலுத்த ரூ.19.50 லட்சம் பணம் தேவைப்படுவதாக கூறினார் .இதனை உண்மை என்று நம்பிய அந்த இளம் பெண் உடனடியாக ஆன்லைன் மூலம் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ 19.50 லட்சம் அனுப்பினார். பணத்தைப் பெற்றுக் கொண்ட இப்ராஹிம் அதன் பின்னர் கோவை வரவில்லை. மேலும் அவர் பயன்படுத்திய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகார் பேரில் இன்ஸ்பெக்டர் அருண், சப்- இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இணைய திருமண தகவல் மையம் மூலம் பழகி கோவை பெண் அதிகாரியிடம் நூதன முறையில் ரூ.19.50 லட்சம் பணம் பறித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.