- கோவையில் விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு காரணமான நபருக்கு 2.6 ஆண்டு சிறை – ரூ.6 ஆயிரம் அபராதம்
கோவை பீளமேடு அருகே விபத்தை ஏற்படுத்தி, உயிரிழப்புக்கு காரணமான வாகன ஓட்டிக்கு 2 ஆண்டு, 6 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.6,000 அபராதம் விதித்து நீதிபதி சரவண பாபு உத்தரவிட்டார்.
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் தனது இருசக்கர வாகனத்தில் பீளமேடு பெரிய தோட்டம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த பிரதாப் என்பவர் இருசக்கர வாகனத்தை அதி வேகமாக ஓட்டி வந்து குருசாமி மீது மோதி உள்ளார். விபத்தில் தூக்கி வீசப்பட்ட குருசாமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக, கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
அஜாக்கிரதையாகவும், கவனக் குறைவாகவும் வாகனத்தை ஓட்டி, விபத்தை ஏற்படுத்தி ஒருவரது உயிரிழப்புக்கு காரணமான இருந்த குற்றத்துக்காக இரண்டு ஆண்டுகள் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ 6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரவண பாபு உத்தரவிட்டார்.