ஈஷா யோகா மையத்தில் 2 நாள் சோதனை முடிவடைந்தது : ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் – போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தகவல்..!

கோவை அருகே உள்ள வடவள்ளியை சேர்ந்தவர் காமராஜ். இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஆவார் . இவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார் .அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனது மகள்கள் கீதா ( வயது 42 )லதா ( வயது 39 )ஆகியோர் எம்.டெக். வரை படித்துள்ளனர். யோகா கற்றுக் கொள்வதற்காக கோவை ஈஷா யோகா மையத்துக்கு சென்ற இருவரும் பின்னர் மூளைச்சலவை செய்யப்பட்டு மொட்டையடிக்கப்பட்டு துறவிகள் ஆகிவிட்டனர். மூத்த மகளின் பெயரை மா மது என்றும் இளைய மகளின் பெயரை ” மா மாயு ” என பெயர் மாற்றி விட்டனர் . அவர்களை பார்க்க வேண்டும் என்றால் கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டிய நிலையில் உள்ளோம் . ஈஷா யோகா மைய நிர்வாகிகள் எங்கள் மகள்களை சந்தித்து பேச அனுமதிப்பதில்லை. திருமணம் செய்து சந்தோஷமாக மணவாழ்க்கை வாழ வேண்டிய மகள்களை இந்த கோலத்தில் பார்ப்பது மிகவும் மன வேதனை அளிக்கிறது. தங்களை தொந்தரவு செய்யக்கூடாது என எங்களது மகள்களை வைத்தே எங்களுக்கு எதிராக வழக்கு தொடர வைத்துள்ளனர். அதனால் இரு மகள்களையும் மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர் . இந்த வழக்கு நீதிபதிகள் எஸ் .எம் . சுப்பிரமணியம், சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பல சந்தேகங்கள் உள்ளதால் பின்னணி அறிய வேண்டியதுஉள்ளது. எனவே ஈஷாயோகா மையம் மீதுஎத்தனை குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன? என்ற விவரங்களை போலீசார் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 4 தேதிக்கு தள்ளி வைத்தனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் 200 போலீசார் ஈஷா யோகா மையத்துக்கு ஏராளமான வாகனங்களில் சென்றனர்.நேற்று முன்தினம் 9 மணி நேரம் விசாரணை நடந்தது. இந்த நிலையில் நேற்று 2 – வது நாளாக போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் – குழுவினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்கள். அவைகள் வீடியோவாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டது. காலை தொடங்கி இரவு 8 மணி வரை மொத்தம் 10 மணி நேரம் விசாரணை நடந்தது..

இதுகுறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் கூறியதாவது: – ஈஷா யோகா மையத்தில் விசாரணை முழுமையாக முடிவடைந்தது. இங்குள்ள வெளிநாட்டவர் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது . மேலும் கிரிமினல் வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்து இருக்கிறோம். விசாரணை குறித்த விவரங்கள் அனைத்தும் ஐ கோர்ட்டில் தெரிவிக்கப்படும்.  அதே நேரத்தில் ஈசா யோகா மையம் கொடுத்திருக்கக்கூடிய புகார்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்..