சந்திரயான் 4 திட்டத்தில் 2 வெவ்வேறு ராக்கெட்டுகள்… மிரளும் மேற்கு நாடுகள்.!!

சென்னை: சந்திரயான்-4 திட்டத்திற்காக இரண்டு வெவ்வேறு ராக்கெட்டுகளை இஸ்ரோ விண்ணில் ஏவ இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திட்டத்தில் நிலவின் மண் மாதிரிகள் பூமிக்கு கொண்டுவரப்படும்.

சந்திரயான் 3 வெற்றி: விண்வெளி துறையில் இந்தியாவுக்கு என தனிப் பெயரை உருவாக்கி கொடுத்தது சந்திரயான் 3 திட்டம்தான். இதுவரை நிலவின் தென் துருவத்தை எந்த நாட்டின் விண்கலமும் தொட்டது கிடையாது. ஆனால், முதல் முறையாக இந்தியா இந்த மகத்தான வரலாற்று சாதனையை படைத்தது. இந்த சாதனை ஒட்டுமொத்த மனித சமூகத்திற்குமான சாதனை என இஸ்ரோ கூறியது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக சந்திரயான்-4 திட்டத்தை செயல்படுத்த முனைப்புக்காட்டி வருகிறது.

சந்திரயான்-4: இந்த திட்டத்தின் நோக்கம் நிலவிலிருந்து மண் மாதிரியை பூமிக்கு கொண்டு வருவதுதான். இதற்காக இரண்டு வெவ்வேறு ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது எல்விஎம் 3 ராக்கெட் மற்றும் பிஎஸ்எல்வி ஆகிய ராக்கெட்டுகள் இதற்கான கருவிகளை சுமந்துக்கொண்டு வெவ்வேறு நாட்களில் விண்ணுக்கு பாயும். இந்த மிஷனை 2028ம் ஆண்டுக்குள் வெற்றிகரமாக முடிக்க இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது.

4வது நாடு: இந்த மிஷன் வெற்றி பெற்றால், நிலவிலிருந்து மண் மாதிரிகளை பூமிக்கு வெற்றிகரமாக கொண்டு வந்து சேர்த்த 4வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெறும். பொதுவாக விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகள் 2-3 பகுதிகளை கொண்டிருக்கும். ஆனால், சந்திரயான் 4 மிஷனுக்காக ஏவப்படும் ராக்கெட்டுகள் 5 விண்கல தொகுதிகளை கொண்டிருக்கும் என்று, இஸ்ரோ இயக்குநர் சோம்நாத் கூறியுள்ளார்.

இனி வரும் காலங்களில் வெவ்வேறு கிரகங்கள் குறித்த ஆய்வுகள் தீவிரமடையும். குறிப்பாக செவ்வாய் குறித்த ஆய்வுகள் அதிகமாக இருக்கும். இதற்கு முன்னதாக நிலவில் விண்வெளி மையம் அமைக்க மேற்கு நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. அதாவது, பூமியிலிருந்து செவ்வாய்க்கு போவதை காட்டிலும், நிலவிலிருந்து செவ்வாய்க்கு போவது கொஞ்சம் ஈஸி. இதற்காகதான் நிலவில் விண்வெளி மையத்தை மேற்கு நாடுகள் கட்டமைக்க முயன்று வருகின்றன.

வெளி கிரகம் குறித்த கூட்டு ஆய்வில் மேற்கு நாடுகளுடன் நாம் பங்கெடுக்க விரும்பினால், அதற்காக நாம் தயாராக இருக்க வேண்டும். இந்த தயாரிப்பு பணியின் ஒரு பகுதியாகத்தான் சந்திரயான்-4 மிஷன் இருக்கிறது.

நிலவின் மேற்பரப்பில் அணு உலையை அமைக்க ரஷ்யாவும், சீனாவும் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், இந்த திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் பணியை தற்போது இரு நாடுகளும் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.