ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது. இதனிடையே தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மலை கிராமங்களில் கடந்த சில மாதங்களாக கருப்பன் என பெயரிடப்பட்ட ஒற்றை யானை தினமும் இரவில் கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதோடு, விவசாயிகள் மற்றும் கிராம மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இதனால் மிகுந்த இன்னலுக்கு ஆளான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அட்டகாசம் செய்யும் கருப்பன் யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கருப்பன் யானை பிடிப்பதற்காக பொள்ளாச்சி டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் இருந்து மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. கும்கி யானைகள் உதவியுடன் மருத்துவ குழுவினர் கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து கருப்பன் யானையை பிடிப்பதற்கான முயற்சி தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் கருப்பன் யானை கிராமங்களுக்குள் புகுந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் தாளவாடி மலைப்பகுதி மக்கள் கருப்பன் யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்லாவிட்டால் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அறிவித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து பொம்மன் மற்றும் சுஜய் ஆகிய இரண்டு கும்கி யானைகள் லாரியில் ஏற்றப்பட்டு தாளவாடி மலைப்பகுதிக்கு நள்ளிரவில் கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டு கும்கி யானைகளை பயன்படுத்தி மருத்துவ குழுவினர் மற்றும் வனத்துறையினர் கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியை மேற்கொள்வர் என சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.