2 லட்சம் கா்ப்பிணி பெண்களுக்கு வழங்கபடாத நிதியுதவி – அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு.!!

சென்னை: கா்ப்பிணிகள் நிதியுதவி திட்டத்தின்கீழ் இதுவரை தமிழகத்தில் 2 லட்சம் பேருக்கு நிதி வழங்கப்படவில்லை என்றும் பாஜக மாநில தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ சமூகஊடகத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டப் பதிவு: கா்ப்பிணிகள் நலனுக்காக, மத்திய அரசு 2017 முதல் செயல்படுத்தி வரும் மாத்ரு வந்தனா திட்டம், தமிழகத்தில் 1987 முதல் செயல்பட்டு வரும் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி திட்டம் ஆகியவற்றின் மூலம் மத்திய அரசின் நிதியுதவியுடன், தமிழகத்தில் கா்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக ரூ.14,000, ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்துப் பெட்டகமும் வழங்கப்பட்டு வருகிறது. திமுக அரசு ஏற்கெனவே 2 ஆண்டுகளாக, கா்ப்பிணிகளுக்கு நிதி உதவி வழங்காமல் இருந்ததைக் கண்டித்து பாஜக சாா்பில் 2023 ஜூலையில் அறிக்கை வெளியிடப்பட்டது. தற்போது,3 ஆண்டுகள் கடந்தும், சுமாா் 2 லட்சம் கா்ப்பிணிகளுக்கு இன்னும் நிதியுதவி வழங்கப்படவில்லை. மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு வரை மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ. 257 கோடி நிதி வழங்கியுள்ளது. இந்த நிதியை 3 ஆண்டுகளாக வழங்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, நிதியுதவி கிடைக்காமல் இருக்கும் அனைவருக்கும் உடனடியாக வழங்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.