கோவை பீளமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பி.எல்.எஸ். நகரில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி போக்குவரத்து போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் அவர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் செல்ல முயன்றனர். உடனே போலீஸ்காரர் ரமேஷ் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது அவர்கள் 2 பேரும் போலீஸ்காரர் ரமேஷ் மீது இருசக்கர வாகனத்தை மோத விட்டு தப்பி செல்ல முயன்றனர்.இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் சேலம் மாவட்டம் சங்ககிரி செட்டி பட்டியை சேர்ந்த ஜனார்த்தனன் (வயது 30 )நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த கதிரவன் (வயது 28) என்பது தெரியவந்தது.பீளமேடு போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட ஜனார்த்தனன், கதிரவன் ஆகியோருக்கு தல 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ 6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கலைவாணி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி வாதாடினார்.