காட்டு யானை தாக்கி 2 பெண்கள் காயம் – அச்சத்தில் பொதுமக்கள்.!!

கோவை, வடவள்ளி மருதமலை, தொண்டாமுத்தூர், தடாகம், சோமையனூர், திருவள்ளுவர் நகர், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 5:30 மணி அளவில் சோமையனூர் பகுதியை சேர்ந்த லட்சுமி (62) மற்றும் சின்னதங்காள் (55) ஆகிய இருவர் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக வெளியில் சென்று உள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு காட்டு யானைகள் லட்சுமியை தும்பிக்கையால் தள்ளி விட்டு உள்ளது. அதில் அவர் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்ததில் இடுப்பில் உள் காயம் ஏற்பட்டது. சின்னதங்காள் யானையைப் பார்த்து பயந்து ஓட முயற்சித்ததில் கீழே விழுந்து கால், கை, முகம் ஆகிய பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டு உள்ளது.

இருவரும் அலறிய சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியினர் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காட்டு யானைகளை கண்டு அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர்.