இரும்பு கம்பியால் தாக்கி 2 வாலிபர்கள் கொலை – இளைஞர்கள் 3 பேர் கைது.!!

கோவை அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியில் கடந்த மார்ச் 25ஆம் தேதி, 3 இளைஞர்களால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட பெயிண்டர்கள் 2 பேர் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (சிஎம்சிஎச்) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.. கிணத்துக்கடவு போலீசார் இது தொடர்பாக 3 பேர் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த செல்வம், (வயது 24), பத்தாளம் (வயது 19), மற்றும் 18 வயது இளைஞர் என்பது தெரியவந்தது. இவர்கள் கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் உள்ள தேங்காய் நார்தொழிற்சாலையில் பாரம் ஏற்றும் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெயிண்டர்கள் எம்.மணிமாறன், (வயது32), சதாம் உசேன், (வயது 35, ) ஆகியோர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து, கிணத்துக்கடவு அருகே வாடகை வீட்டில் தங்கி இருப்பது தெரிய வந்தது. மார்ச் 25 ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் காலைக்கடன் கழிக்க இருவரும் கொண்டம்பட்டி – நெகமம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது 3 இளைஞர்கள் இருவரையும் பின்தொடர்ந்து, அவர்களது பகுதியில் சுற்றித் திரிவது குறித்து விசாரித்தனர். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பெயின்டர்கள் மற்றும் 3 இளைஞர்கள் குடிபோதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்கள் மணிமாறன், சதாம் உசேன் ஆகிய இருவரையும் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பினர். இதில் மணிமாறன் தலை மற்றும் புருவத்தில் காயம் ஏற்பட்டது. சதாமின் தலையிலும் காயம் ஏற்பட்டது. அவர்கள் சிஎம்சிஎச்சில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர், அங்கு மணிமாறனுக்கு 20 தையல்களும், சதாமுக்கு தலையில் 6 தையல்களும் போடப்பட்டன. சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மருத்துவமனையில் மணிமாறன் உயிரிழந்தார். வெள்ளிக்கிழமை இரவு 11.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி சதாம் உசேன் உயிரிழந்தார். கிணத்துக் கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலைசாமி கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றினார். மேலும் விசாரணை நடந்து வருகிறது..