கோவை விமான நிலையத்திலிருந்து சென்னை-மும்பை டெல்லிக்கு அதிகம் பேர் விமானத்தில் பயணம் செய்கிறார்கள் . கடந்த ஆண்டு கோவை விமான நிலையத்திலிருந்து சென்னை டெல்லி மும்பைக்கு மொத்தம் 19 லட்சத்து 87 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். இதில் சென்னைக்கு மட்டும் 8லட்சத்து 57 ஆயிரம் பேரும், மும்பைக்கு 7 லட்சத்து 20 ஆயிரம் பேரும் டெல்லிக்கு 4 லட்சத்து 10 ஆயிரம் பேரும் பயணம் செய்துள்ளனர். சென்னைக்கு தினமும் சராசரியாக 2, 341 பேரும், மும்பைக்கு 1973 பேரும், டெல்லிக்கு 1125 பேரும் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு முழுவதும் வெளிநாடுகள் மற்றும் வெளி நகரங்களுக்கு 30 லட்சத்து 63 ஆயிரத்து 878 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை 28 லட்சத்து 78 ஆயிரத்து 296 ஆகும்.சர்வதேச பயணிகள் 2 லட்சத்து 35 ஆயிரத்து 582 ஆகும். மொத்தமாக கையாண்ட சரக்குகள் 11,580 டன்.விமான நிலைய விரிவாக்க திட்டம் 2030 ‘ஆம் ஆண்டு தான் முடிவடைந்து செயல்பாட்டுக்கு வருகிறது .எனவே நெரிசலை குறைக்க கோவை விமானநிலையத்தில் சீரமைப்பு பணிகள் செய்ய வேண்டும் என்று விமான பயணிகள் சங்கம் வலியுறுத்தி வருகிறது.
இதுகுறித்து விமான பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது :-அதிக எண்ணிக்கையிலான பணிகளை கையாளும் திறன் கொண்ட கோவை விமான நிலையத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். கோவையில் இருந்து தற்போது மேலும் பல நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து கொழும்பு,பாங்காங் நகர்களுக்கு நேரடி விமான சேவை வேண்டும். உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும். தொழில் நகரமான கோவையில் ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே வெளி மாநிலங்களுக்கு சரக்குமானங்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்..