கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி கோவை ரயில் நிலையம் பகுதியில் சோதனை நடத்தினார்கள்.அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர் . அவர்களிடம் 44 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் தேனி தேவாரம் பகுதியைச் சேர்ந்த செல்லதுரை ( வயது 51) தேனி உத்தமபாளையத்தைச் சேர்ந்த கதிரேசன் (வயது 35) என்பதும் தெரிய வந்தது .அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பாலித்தீன் கவரில் வைத்திருந்த கஞ்சாவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில் மூலமாக கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை இன்றியமையா பண்டங்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு விசாரணை முடிவடைந்தது. வழக்கில் நீதிபதி லோகேஸ்வரன் குற்றம் சாட்டப்பட்ட கதிரேசன், செல்லத்துரை ஆகியோருக்கு வணிக அளவு எடை உள்ள கஞ்சாவை கடத்திய குற்றத்திற்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ 4 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் சிவக்குமார் ஆஜர் ஆனார்..