இன்று முதல் வருகிற செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் படிப்படியாக திரும்ப பெறப்படும் எனவும் அறிவித்துள்ளது. கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதாவது செப்டம்பர் 30ந் தேதிக்குள் மாற்றிக் கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள எந்த ஆவணங்களும் தேவையில்லை என எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், இன்று முதல் செப்டம்பர் 30 தேதி வரை வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ. 20,000 வரை மாற்றி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதாவது 10 இரண்டாயிரம் நோட்டுகளை ஒரே நாளில் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.