2036ல் ஒலிம்பிக் போட்டி இந்திய விளையாட்டை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் – பிரதமர் மோடி.!

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது. வரும் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டில் 32 பிரிவுகளில் போட்டிகளில் நடைபெறுகின்றன.

இதில் தமிழகத்தில் இருந்து 391 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். டேராடூனில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற கண்கவர் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

பாட்மிண்டன் வீரர் லக்சயா சென் தேசிய விளையாட்டு போட்டிக்கான ஜோதியை மைதானத்தை வலம் வந்தபடி பிரதமர் மோடியிடம் வழங்கினார். விழாவில் உத்தராகண்ட் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங், முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மத்திய விளையாட்டுத் துறை இணை அமைச்சர் ரக் ஷா காட்சே, உத்தராகாண்ட் விளையாட்டுத் துறை அமைச்சர் ரேகா ஆர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேராடூன், ஹரித்வார், நைனிடால், ஹல்த்வானி, ருத்ராபூர், சிவபுரி, நியூ தெஹ்ரி ஆகிய 7 மையங்களில் 18 நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டில் 38 அணிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். உத்தராகண்ட் தேசிய விளையாட்டு போட்டியில் தடகளம், நீச்சல், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பாட்மிண்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளுதூக்குதல், கால்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து ஒலிம்பிக் விளையாட்டுகளும் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், கபடி, கோ கோ போன்ற பாரம்பரிய விளையாட்டுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. களரிப்பயட்டு, யோகா, மல்லர்கம்பம் ஆகியவை பதக்கம் இல்லாத செயல் விளக்க போட்டிகளாக இடம் பெற்றுள்ளன. போட்டிகளை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, ‘2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை பெறுவதற்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். இது இந்திய விளையாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்.

ஒலிம்பிக் எங்கு நடந்தாலும், அனைத்து துறைகளும் பயனடைகின்றன. இது விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த வசதிகளை உருவாக்குகிறது. விளையாட்டு வீரர்களின் திறன்களை மேம்படுத்த முயற்சி செய்கிறோம். உங்களை ஆதரிப்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். நாட்டின் வளர்ச்சியில் விளையாட்டு ஒரு முக்கிய அம்சமாக நாங்கள் கருதுகிறோம்’ என்றார்.