வாஷிங்டன்: இந்தியாவில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்க வழங்கப்பட்டு வந்த 20 மில்லியன் டாலர் நிதியுதவி நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து பேசிய டிரம்ப், நிதி உதவி மூலம் இந்திய தேர்தலில் தலையிட ஜோ பைடன் நிர்வாகம் முயற்சித்து இருக்கலாம் என யூகிக்கிறேன் எனப் பேசியிருக்கிறார்.
டிரம்பின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் இந்தியாவில் தேர்தலில் தலையிட முயன்றதாக சூசகமாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளர். அரசின் செயல் திறன் துறை (DOGE) இந்தியாவுக்கு அளித்து வந்த 21 மில்லியன் நிதியை நிறுத்த உத்தரவிட்டுள்ளதை நியாயப்படுத்தி பேசிய டிரம்ப் இவ்வாறு பேசினார்.
மியாமி மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிரம்ப் கூறியதாவது:- இந்தியாவில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்க நாம் ஏன் 21 மில்லியன் கொடுக்க வேண்டும். வேறு யாரோ தேர்வு ஆக வேண்டும் என்று ஜோ பைடன் நிர்வாகம் முயற்சித்து இருக்கலாம் என யூகிக்கிறேன். இந்திய அரசிடம் நாம் இதை சொல்ல வேண்டும்” என்றார்.
முன்னதாக, அமெரிக்க அரசின் செயல்திறன் துறை என்கிற புதிய உருவாக்கிய டிரம்ப் அதன் தலைவராக எலான் மஸ்கை நியமித்தார். அரசு நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் வீண் செலவினங்களை கட்டுப்படுத்துதல் ஆகியவை புதிய துறையின் பணியாகும்.
அதன்படி எலான் மஸ்க் தலைமையிலான அந்த புதிய துறை செலவினங்களை குறைப்பதாக கூறி பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவிகளை நிறுத்தி வந்தது.. அந்த வகையில் இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டு வந்த 21 மில்லியன் டாலர் (சுமார் ரூ.182 கோடி) நிதியுதவியை நிறுத்துவதாக அரசாங்க செயல்திறன் துறை கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் முடிந்த சில நாட்களில் இந்த அறிவிப்பு வெளியானது. இதற்கான உத்தரவில் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். அப்போதும் டிரம்ப் தனது அரசின் உத்தரவை நியாயப்படுத்தியிருந்தார். இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான நிதியுதவியை நிறுத்துவது தொடர்பான நிர்வாக உத்தரவுகளில் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். அதன் பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் இந்தியாவுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:- “இந்தியாவுக்கு 21 மில்லியன் டாலர் நிதியை நாம் ஏன் ஒதுக்க வேண்டும். இந்தியவிடம் அதிக பணம் உள்ளது. அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்த வரி விதிப்பால் நாம் தான் அதிகம் பாதிக்கப்படுகிறோம். இந்திய பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அதற்காக வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க 21 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டுமா? ” எனப் பேசினார்..