230 டிகிரி குளிர்… நிலவின் தென்துருவத்தில் என்ன இருக்கிறது..? ஆராயயும் சந்திரயான் 3… சுவாரசிய தகவல்.!!

சென்னை: அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை நடுங்கி போய் நிற்கும் நிலையில் இந்தியா மட்டும் நிலவின் தென்துருவத்தை ஆராய முனைப்பு காட்டி வருகிறது.

ஆனால் இந்தியாவின் இந்த முயற்சி பாராட்டகூடிய ஒன்றாக இருந்தாலும் கூட அதில் பல சிரமங்கள் இருக்கிறது. மேலும் நிலவின் தென்துருவத்தின் கோர முகம் என்ன? என்பது பற்றிய தகவலும், வல்லரசு நாடுகளே ஒதுங்கி நிற்கும் நிலையில் நிலவின் தென்துருவத்தை ஆராய இந்தியா முனைப்பு காட்டுவதன் பின்னணி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

நாம் வாழும் பூமியின் துணை கேளாக நிலா உள்ளது. இந்த நிலவை ஆய்வு செய்யும் பணியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கான திட்டம் தான் சந்திரயான். சந்திரயான் முதல் திட்டத்தில் நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை இந்தியா கண்டுபிடித்தது.

அதன்பிறகு சந்திரயான் 2 திட்டத்தின் லேண்டர் உதவியுடன் ரோவர் வாகனத்தை பயன்படுத்தி நிலவின் தென்துருவத்தை ஆராய முடிவு செய்தது. இந்த திட்டம் கடைசி நேரத்தில் பின்னைடைவை சந்தித்தது. நிலவின் தென்துருவத்தை நெருங்கிய சந்திரயான் 2 திட்டத்தின் லேண்டர் மெதுவாக தரையிறங்குவதற்கு பதில் விழுந்து நொறுங்கியது.

இருப்பினும் சந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டபாதையில் இன்னும் சுற்றி வருகிறது. ஆனாலும் நிலவில் தரையிறங்கு முயற்சி மட்டுமே நடக்காமல் போனது. இந்நிலையில் தான் முந்தைய திட்டத்தில் கற்ற விஷயங்களின் அடிப்படையில் தற்போது சந்திரயான் 3 திட்டத்தை இந்தியா கையில் எடுத்துள்ளது. நிலா குறித்த ஆய்வில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து இந்தியாவும் கால்பதிக்கும் நோக்கத்தில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.

இஸ்ரோ சார்பில் சந்திரயான்-3 திட்டம் ரூ.615 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 விண்கலம் 3 ஆயிரத்து 900 கிலோ எடையோடு 7 விதமான ஆய்வுக் கருவிகளுடன் நேற்று ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது. நிலவின் தென்துருவத்தை நோக்கி சந்திரயான்-3 விண்கலம், லேண்டர் மற்றும் ரோவர் கருவிகள் செல்கின்றன. இந்த சந்திரயான் 3 விண்கலம், லேண்டர், ரோவர் கருவிகளை குண்டு பையன் மற்றும் பாகுபலி ராக்கெட் என்ற செல்லப் பெயர்களை கொண்ட செல்லும் எல்விஎம்3-எம்4 ராக்கெட் விண்ணில் செலுத்தியது.

ராக்கெட் புறப்பட்ட 16 நிமிடம் 15 வினாடிகளில் நிர்ணயிக்கப்பட்ட 179 கிலோ மீட்டர் உயரத்தை அடைந்ததும் சந்திரயான்-3 விண்கலத்தை திட்டமிட்டபடி குறிப்பிட்ட இலக்கில் வெற்றிகரமாக கொண்டு சேர்த்தது. இந்த பயணத்தில் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும், 3-வது நிலையில் பொருத்தப்பட்டிருந்த சி.இ.20 கிரையோஜெனிக் எஞ்ஜின் வெற்றிகரமாக இயங்கி சந்திரயான்-3 விண்கலத்தை விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு சென்று பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தியது. அதையடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு நிலையம், விண்கலத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

இதையடுத்து தான் சந்திரயான்-3 விண்கலம் சுமார் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடங்கி உள்ளது. 40 முதல் 42 நாட்கள் கழித்து இந்த விண்கலம் ஆகஸ்ட் 23-ந்தேதி மாலை 5.45 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும். லேண்டரில் இருந்து ரோவர் வாகனம் பிரிந்து ஆய்வு மேற்கொள்ளும். இந்த கருவிகள் ஒரு நிலவு நாள் அதாவது 14 நாட்கள் ஆய்வு செய்து புகைப்படங்கள் மற்றும் தகவல்களை அது திரட்டித் தரும்.

நிலவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கால்பதித்துள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் நிலவின் வடதுருவத்தில் தான் தங்களின் ரோவரை தரையிறக்கி உள்ளனர். இன்னும் யாரும் தென்துருவத்தில் தங்களின் ரோவர் வாகனத்தை தரையிறக்கவில்லை. இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. ஏனென்றால் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்து என்பது மிகவும் சிரமமான ஒன்றாகும். இதனால் தான் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் இதனை கைவிட்டு வருகின்றன.

ஏனென்றால் நிலவின் தென்துருவம் ஒரு கரடு முரடான பகுதியாகும். அங்குள்ள நிலப்பரப்பு சமதளத்தில் இல்லை. பள்ளம், மேடு நிறைந்த பகுதியாக தென்துருவம் அமைந்துள்ளது. இதனால் லேண்டரை மெதுவாக தரையிறக்குவதில் பெரிய சவால் உள்ளது. மேலும் தென்துருவத்தின் பல பகுதிகள் இருள் சூழ்ந்த பகுதியாக உள்ளன. இங்கு சூரியஒளியே கிடைக்காத நிலை உள்ளது.

பொதுவாக லேண்டர் உள்ளிட்ட ஆய்வு வாகனங்கள் சூரியஒளி உதவியுடன் இயங்கும் வகையில் தயாரிக்கப்படும். இத்தகைய சூழலில் சூரியஒளி அங்கு இல்லாமல் இருப்பது திட்டத்துக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. மேலும் சூரியஒளி கிடைக்காமல் இருப்பதால் நிலவின் வடதுருவத்தை விட தென்துருவம் என்பது மிகவும் குளிராக இருக்கும். அதாவது -230 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் குளிர் இருக்குமாம். இதுவும் ஆய்வு வாகனங்களின் செயல்பாட்டை முடக்க வாய்ப்புள்ளது. இதனால் தான் வல்லரசு நாடுகள் இந்த ரெஸ்க்கை ஒருபோதும் எடுக்காமல் உள்ளது.

இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் தான் இந்தியா 2வது முறையாக தென்துருவத்தை ஆய்வு செய்வதில் அதீத ஆர்வம் காட்டி வருகிறது. சந்திரயான் 2 திட்டம் மயிரிழையில் மிஸ்ஸானது. இந்த திட்டம் 80 சதவீதம் வெற்றி பெற்ற நிலையில் லேண்டர் தரையிறங்குவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் லேண்டர் விழுந்து நொறுங்கியது. இது தான் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மாறாக லேண்டர் மெதுவாக தரையிறங்கி அதில் இருந்து ரோவர் ஆய்வு வாகனம் வெளியே வந்திருந்தால் இந்தியா விண்வெளி துறையில் மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கும். இருப்பினும் சந்திரயான் 2 திட்டம் சாதிக்க தவறியதை சந்திரயான் 3 சாதிக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஏனென்றால் சந்திரயான் – 2 திட்டத்தில் கற்றுக்கொண்ட பாடத்தை வைத்து லேண்டர் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் நிலவின் தென்துருவத்தில் ஆராய என்ன இருக்கிறது? இந்தியா ஏன் மீண்டும் மீண்டும் இந்த ரெஸ்க்கை எடுக்கிறது? என நீங்கள் கேட்டால் அதற்கு விடை இதுதான். அதாவது நிலவின் தென்துருவத்தில் அதிக குளிர் நிலவுகிறது. இதனால் பல மில்லியன் ஆண்டுக்கு முந்தைய பொருட்கள் கூட அப்படியே இருக்க வாய்ப்புள்ளது. இதனால் தென்துருவத்தை ஆராய்ந்தால் அதுபற்றிய பல உண்மைகள் கிடைக்கும். இதனால் தான் இந்தியா நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதில் அதிக முனைப்பு காட்டுகிறது.