கல்லூரி மாணவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 3 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் பணம் கொள்ளை: முக்கிய குற்றவாளி கைது – இருவர் தலைமறைவு.!

கோவை புலியகுளம் பகுதியில் அறை எடுத்து தங்கி தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர் நாசிப். இவருடன் 5 நண்பர்களும் தங்கி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று அங்கு வந்த மூன்று மர்ம நபர்கள் நாசிப் அறையின் கதவைத் தட்டி உள்ளனர்.

அறையை திறந்த பின் உள்ளே நுழைந்த மூவரில், ஒருவர் நாசிப்பின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு மிரட்டி அங்கிருந்த 2,85,000 மதிப்புள்ள 5 விலை உயர்ந்த மொபைல் போன்கள் மற்றும் 500 பணத்தை எடுத்துக் கொண்டு, நாசிப் தாக்கி விட்டு அறையையும் மூடிவிட்டு சென்றுள்ளனர்.

பின்னர் அறையில் இருந்த மாணவர்கள் வெளியேறி இச்சம்பவம் குறித்து இராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கொண்டு ஆய்வு செய்தும் மொபைல் ட்ராக்கிங் தொழில் வசதியைக் கொண்டும் மூன்று பேரில் ஒருவரை தற்போது பிடித்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்ட நபர் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ்(23) என்பது தெரிய வந்தது.

மேலும் அவர் தான் இச்செயலுக்கு மூளையாக செயல்பட்டதும் தெரிய வந்தது. பின்னர் அவரிடமிருந்து 95,000 மதிப்புள்ள மூன்று மொபைல் போன்கள் மற்றும் ஒரு கத்தியையும் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மீதமுள்ள இருவரை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்..