ஆட்டோ டிரைவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது..!

கோவை சுந்தராபுரம் பகுதியில் வசிப்பவர் பிரபாகரன்(வயது 32) ஆட்டோ வாடகைக்கு ஓட்டி வந்தார்..

இவர் 5 – ந் தேதி காலை அவரது மனைவியிடம் வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர்,செட்டிபாளையம்- வடசித்தூர் சாலையில் அவரது வாகனத்தில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை அறிந்த பிரபாகரனின் மனைவி சண்முகப்பிரியா சம்பவ இடம் சென்று பார்த்துவிட்டு நெகமம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்படி கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.பத்ரிநாராயணன் உத்தரவிட்டார். இதன் பேரில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவான கொலை குற்றவாளிகளை தேடி புலன் விசாரணை செய்து வந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் இறந்த பிரபாகரனின் தங்கையின் கணவரான கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம் மகன் சாதிக் பாஷா (36) என்பவரை விசாரிக்க முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியவர், பின் தனக்கும் பிரபாகரனின் தங்கைக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தான் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற போது அதற்கு தடையாக இருந்த பிரபாகரன் மீது ஏற்பட்ட முன் விரோதத்தின் காரணமாக தனது நண்பர்களான மணிகண்டன் (வயது 24)மற்றும் இளஞ்சிறார் ஒருவர் மூலம் பிரபாகரனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் பிரபாகரனை வாடகைக்கு அழைப்பது போல் மணிகண்டன் மற்றும் இளஞ்சிறார் ஒருவரும் பிரபாகரனை வரவழைத்து கத்தியால் குத்தி கொலை செய்ததாக சாதிக் பாஷா கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் பேரில் மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சாதிக் பாஷா (36), மணிகண்டன் (24) மற்றும் இளஞ்சிறார் ஒருவரையும் தனிப்படையினர் கைது செய்தனர். மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கும் மற்றும் இளஞ்சிறார் ஒருவரை அரசு கூர்நோக்கு இல்லத்திற்கும் அனுப்பி வைத்தனர்.
மேலும் மேற்படி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட கொலை குற்றவாளிகளை 12 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படை காவல்துறையினரை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.