திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மணக்கால் பகுதியில் போலீஸார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் நின்று கொண்டிருந்தது தெரிய வந்தது. அவர்களை பிடித்து போலீஸார் விசாரணை நடத்திய போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் அவர்களது வாகனத்தை சோதனை செய்துள்ளனர். சோதனையின்போது அவர்களது வாகனத்தில் இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் இரண்டு தோட்டாக்கள் ஆகியவை இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் மூவரையும் விசாரணைக்காக லால்குடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மூவரும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் ராமு (எ) முரளி (48), அவரது மனைவி மகேஸ்வரி (37), இவர்களது உறவினரான சிவரஞ்சனி (48) ஆகியோர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து உரிமம் இல்லாமல் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்ததற்காக மூவரையும் கைது செய்த போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி லால்குடி கிளைச் சிறையில் அடைத்தனர்.
இவர்கள் ஏதேனும் சதிச் செயலில் ஈடுபடுவதற்காக இந்த நாட்டுத் துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிந்தார்களா அல்லது வனவிலங்கு வேட்டையில் ஈடுபட இதை வைத்திருந்தனரா என்கிற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.