கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவில் நகை பறிக்க வந்த 3 பெண்கள் கைது – 20 பவுன் நகைகள் பறிமுதல்.!!

கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கக்கூடிய கோனியம்மன் கோவில் தேர் திருவிழா வருகிற 28ஆம் தேதி (புதன்) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கூட்டம் நெரிசலை பயன்படுத்தி நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தெற்கு பகுதி துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரூவந்திகா, சப் இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, உமா, மஞ்சுளா, ஏட்டுக்கள் கார்த்தி, பூபதி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் உக்கடம், பெரிய கடை வீதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கோவில் அருகே டிப்டாப் உடை அணிந்து சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த 3 பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்திதோப்பை சேர்ந்த பார்வதி ( வயது 35) கிணத்துக்கடவு முத்துமாரி (வயது 28) ஆர்த்தி ( வயது 26) என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் கோனியம்மன் கோவில் தேரோட்டத்தில் கூட்டம் நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகைகள் பறிப்பதற்காக வந்தது தெரிய வந்தது. இவர்களில் பார்வதி என்ற பெண் பேரூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவை குறிவைத்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து கடந்த ஆண்டு நடந்த தேரோட்டத்தின் போது பறித்த 20 பவுன்தங்க நகைளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் 3 பெண்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களது கூட்டாளிகளான மேலும் சில பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள்.