ஆவினில் வேலை வாங்கி தருவதாக ஓய்வு பெற்ற ஊழியரிடம் 30 லட்சம் மோசடி – இளநிலை செயலாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு..!

கன்னியாகுமரி பகுதியில் பால் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியரின் மகனுக்கு ஆவணியில் மேலாளர் வேலை வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நான்கு பேர் மீது குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தனர். குமரி மாவட்டம் பேயோடு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி பேயோடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் விற்பனையாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். ரங்கசாமி பணியில் இருந்த காலகட்டங்களில் வேலை நிமித்தமாக நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்திற்கு செல்வது வழக்கம். இதன் மூலம் அங்குள்ள அலுவலர்களுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி அந்த அலுவலகத்தில் இளநிலை செயலாளராக இருந்த ஐயப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் புதுக்கோட்டை மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியத்தில் மேலாளர் பணியிடம் காலியாக இருப்பதாகவும் 30 லட்சம் தந்தால் உங்கள் மகனுக்கு அந்த வேலையை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். அந்த சமயத்தில் ஆவின் அலுவலகத்தில் பணியாற்றும் மேலும் சிலரும் தனக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசியதால் அவர்களின் பேச்சை நம்பி பல்வேறு தவணைகளாக முப்பது லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இந்த பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றுள்ளது. இதில் ரங்கசாமியின் மகன் பிரசாந்த் பங்கு பெற்று எழுதி தேர்வு எழுதி உள்ளார். வேலைக்கான உத்தரவு வந்துவிடும் என தெரிவித்துள்ளனர். கொரோனா காலகட்டமாக இருந்தால் தாமதம் இருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் வேலைக்கான உத்தரவு வராததால் சம்பந்தப்பட்டவர்களிடம் பணத்தை திரும்ப கேட்க தொடங்கியுள்ளார் ரங்கசாமி. பணம் கொடுக்கப்படாததால் பணத்தை கேட்டு தொந்தரவு செய்தால் கூலிப்படை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். இதனால் 30 லட்சம் வரை மோசடி செய்ததுடன் கொலை மிரட்டல் கொடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும் எனவும், பணத்தை மீட்டு தர உத்தரவிட வேண்டும் எனவும் நீதிமன்றம் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதன் பெயரில் கன்னியாகுமரி மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றிய இளநிலை செயலாளர் ஐயப்பன், கோவை மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றிய பொறியியல் பிரிவு துணை மேலாளர் சகாயம், கன்னியாகுமரி மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றிய இளநிலை செயலாளர் பழனி, நாகர்கோவில் ராமவர்மபுரத்தைச் சேர்ந்த சரஸ்வதி ஆகிய நான்கு பேர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு நபர்களில் ஒருவரான கோவை ஆவின் ஊழியர் சாகயம் முத்தையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்..