அ.தி.மு.க.வினர் 3 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைய உள்ளனர்- கோவை செல்வராஜ் பேட்டி..!

கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் எனவும், அதிமுக-வினர் 3 ஆயிரம் பேர் திமுகவில் இணைய உள்ளதாகவும் முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவையில் 2 நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசும்போது வேறு கட்சிக்கு செல்பவர்கள் உருப்படமாட்டார்கள் என்றார். கொள்ளையடித்து சேர்த்த சொத்துகளை பாதுகாக்க அதிமுக.வினரை பிச்சைகாரர்கள் போல் பயன்படுத்தும் எஸ்.பி.வேலுமணியை யாரும் மன்னிக்க மாட்டார்கள். ரூ.800 மதிப்புள்ள எல்.இ.டி 4 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். பிளீச்சிங் பவுடர் கூட இவருடைய பினாமிகள் தான் போட்டனர்.
மாநகராட்சிக்கு கொசு மருந்து அடிக்க 5 லாரி வாங்கியதாக கூறினார்கள். ஆனால் என்றும் வந்ததில்லை. அனைத்தும் பழுதடைந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 1000 கொசுமருந்து அடிக்கும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. அதிமுக.வில் கோவையில் உள்ள அடிமட்ட நிர்வாகிகளுக்கு எந்த ஒரு டெண்டரும் கொடுத்ததில்லை. அனைத்தையும் கொள்ளையடித்து வெளி நாடுகளில் சேர்த்து வைத்துள்ளார். இவருக்கு யாரை பற்றியும் பேச தகுதியில்லை.
குட்கா வியாபாரிகளிடம் விஜயபாஸ்கர் ரூ. 83 கோடி லஞ்சம் வாங்கியுள்ளார். தமிழகம் முழுக்க அதிமுக ஆட்சி என்ற பெயரில் ஒரு நிறுவனம் நடத்தி மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்தனர். இது அனைத்து லிஸ்டும் என் கையில் உள்ளது. அடுத்தவாரம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க உள்ளேன்.
குப்பை வாகனம், கொசு மருந்து வாகனம், கொரோனா காலத்தில் வாகனம் வாங்கியதில் ஊழல், குளத்தில் அதிக பணம் செலவு செய்ததாக பொய் கணக்கு காட்டியது என புள்ளிவிவரங்கள் என்னிடம் உள்ளது. மேலும் உக்கடம் குளத்தில் ஸ்மார்ட் சிட்டி பணியில் ரூ. 43 கோடி செலவு செய்ததாக கணக்கு காட்டி ஊழல் நடைபெற்று உள்ளது. கோவை ஆர்.எஸ் புரம் டிபி ரோட்டில் ஒன்றரை கிலோ மீட்டர் சாலைக்கு ரூ. 17 கோடி செலவு செய்து ஊழல் என பல வகைகளில் ஊழல் நடைபெற்றுள்ளது.
புதிதாக போடப்பட்ட சாலை 5 ஆண்டுகளுக்குள் பழுதடைந்தால் மீண்டும் ஒப்பந்தம் எடுத்தவரே அதனை சரி செய்ய வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. இப்போது சாலை மோசம் என்கின்றனர். இவர்கள் போட்ட சாலை குறித்து இவர்களே பேசுகிறார்கள். முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலு மணியின் ஊழல் விவரங்களை கடந்த 7 மாதங்களாக சேகரித்து வைத்துள்ளேன். கோவை, சேலம், மதுரை , திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் செய்த ஊழல் பட்டியல் உள்ளது. இவற்றை விரைவில் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் வழங்க உள்ளேன்.
அன்னூரில் தொழிற்பூங்கா அமைந்தால் கிராம மக்கள் வாழ்கை முன்னேறும், வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதனை முதலமைச்சர் பரிசீலனை செய்து, தரிசு நிலங்களில் மட்டும் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ள முதலமைச்சராக மு.க ஸ்டாலின் உள்ளார். இனி தமிழகத்தில் திமுக மட்டுமே ஆட்சியில் இருக்கும். தமிழகத்தில் பாஜக-வினருக்கு ஒருபோதும் எதிர்காலம் கிடையாது. ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் உள்ளார். ஒன்றிய அரசுக்கு இந்த விஷயத்தில் அக்கறை இல்லை. ஜி.எஸ்.டி உள்ளிட்ட வரியில் இருந்து ரூ.19,350 கோடி தமிழகத்திற்கு வர வேண்டி உள்ளது. பெட்ரோல், டீசலுக்கு மானியம் தருவதாக ஒன்றிய அரசு கூறியது. ஆனால் அதுவும் வரவில்லை. இதற்கெல்லாம் அண்ணாமலை போராட்டம் எதுவும் செய்யவில்லை.
வாய்சவடால் விடும் அண்ணாமலை, இதுவரை ஓன்றிய அரசிடம் பேசி தமிழக மக்களுக்கு என்ன நலன் செய்துள்ளார்.? வயை திறந்தால் பொய் தான். பா.ஜ.க தமிழகத்தில் ரோட்டில் அனாதையாக சுத்தப்போகிறது. இந்தியாவில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் ஏராளமான இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஒன்றிய அரசு ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடுக்க சட்டம் இயற்ற அண்ணாமலை குரல் கொடுக்க தயாரா? கார்ப்பரேட் நிறுவனமிடமிருந்து ரூ. 12 லட்சத்து 60 ஆயிரம் கோடி வாரா கடனை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் 567 பண முதலாளிகள் பயன்பெற்றுள்ளனர். ஆனால் வீட்டுக் கடன் வாகன கடன், கல்வி கடன், என மொத்தமாக உள்ள ரூ. 8 லட்சம் கோடியை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்தால் 36 கோடி மக்கள் பயன்பெறுவார்கள். அவற்றை செய்யாமல் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுக்கு உகந்த அரசாக மட்டுமே இந்த ஒன்றிய அரசு உள்ளது. விரைவில் அதிமுக நிர்வாகிகள் 60 பேர் சென்னை சென்று முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்க உள்ளனர். இந்த மாத இறுதியில் 60 பேருந்துகளில் கோவை நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் என 3 ஆயிரம் அதிமுக-வினர் சென்னை சென்று முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.