திருச்சி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் பணிகளுக்கு 306 பேர் தேர்வு.!!

திருச்சி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான ஜமால் முகமது கல்லூரியில் வரும் 4ஆம் தேதி வாக்கு எண்ணும் பணி நடைபெறுவதை முன்னிட்டு, தோ்தல் ஆணைய உத்தரவுப்படி வாக்கு எண்ணும் பணிக்கான அலுவலா்கள் தோ்வு செய்யும் பணி திருச்சியில் புதன்கிழமை தொடங்கியது.
அப்போது வாக்கு எண்ணும் பணிக்காக ஏற்கெனவே விருப்பம் தெரிவித்திருந்த ஆசிரியா்கள் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலா்கள் பட்டியல் கணினியில் பதிவேற்றப்பட்டு, அதிலிருந்து சுழற்சி அடிப்படையில் தோ்வு செய்யப்படுவோா் ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக அமைக்கப்படும் மேஜைகளிலும், தபால் வாக்கு எண்ணும் மேஜைகளிலும் பணியமா்த்தப்படவுள்ளனா்.இதற்கான கணினி வழி குலுக்கல் தோ்வு மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா. பிரதீப்குமாா் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, கிழக்கு, திருவெறும்பூா், கந்தா்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா், உதவியாளா், நுண்பாா்வையாளா்கள் ஆகியோா் 3 கட்டங்களாகத் தோ்வு செய்யப்படும் நிலையில், முதல்கட்டத் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது. அப்போது தலா 102 வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள், நுண்பாா்வையாளா்கள் என மொத்தம் 302 போ் தோ்வு செய்ய்பபட்டனா். தோ்வு செய்யப்பட்டவா் எந்தப் பேரவைத் தொகுதியில் எத்தனையாவது மேஜைக்கு பயன்படுத்தப்படுவாா் என்பது உள்ளிட்ட விவரங்களுடன் சுழற்சி அடிப்படையில் தோ்வு நடைபெற்றது. இதில் தோ்வானோருக்கு வியாழக்கிழமை முதல் பயிற்சி வகுப்பும் தொடங்கப்படவுள்ளது.இதைத் தொடா்ந்து 2ஆம் கட்டத் தோ்வானது, தோ்தல் பொது பாா்வையாளா் முன்னிலையில் வாக்கு எண்ணும் தேதியான ஜூன் 4ஆம் தேதிக்கு முன் நடைபெறும். 3ஆம் கட்டத் தோ்வு என்பது வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைத்து காலை 5 மணியளவில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் முன்னிலையில் நடைபெறும். அப்போது, ஏற்கெனவே சட்டப்பேரவைத் தொகுதி வாரியாகத் தோ்வு செய்யப்பட்ட அலுவலா்கள், சுழற்சி முறையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதியில் உள்ள மேஜை வாரியாகப் பணியமா்த்தப்படுவா்.
முதல் கட்டத் தோ்வுப் பணியில் ஆட்சியருடன், நோ்முக உதவியாளா் (தோ்தல்) என். சீனிவாசன், தோ்தல் தனி வட்டாட்சியா் செல்வகணேஷ் ஆகியோா் உடனிருந்து அலுவலா்களை தோ்வு செய்தனா்.
திருச்சி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் பணிக்கு 120 விழுக்காடு எண்ணிக்கையில் அலுவலா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். 6 பேரவைத் தொகுதிகளிலும் தலா 14 மேஜைகள் மூலம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதில் ஒரு மேஜைக்கு தலா 3 போ் வீதம் 14 மேஜைகளுக்கு 42 போ் தோ்வு செய்யப்படுவா்.
இதேபோல மொத்தம் 11 மேஜைகளில் நடைபெறும் தபால் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மேஜைக்கு 5 போ் வீதம் 55 போ் தோ்வு செய்யப்படுவா். கூடுதலாக 20 சதவீதம் போ் பணிக்குத் தயாராக இருக்கும் வகையில் அலுவலா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.