அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவின்பேரில், அந்நாடு யேமனில் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 31 போ் உயிரிழந்தனா். 100-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.
பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாகப் போா் நடைபெற்று வந்தது.
இந்தப் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக யேமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சிப் படையினா், செங்கடல் வழியாகச் சென்ற சரக்குக் கப்பல்கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் மேற்கொண்டனா்.
இஸ்ரேல் செல்லும் சரக்குக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக அவா்கள் கூறினா். பின்னா் காஸாவை இஸ்ரேல் முற்றுகையிட்டுள்ளது கைவிடப்படும் வரை, செங்கடலில் தங்கள் தாக்குதல் தொடரும் என்று அந்தப் படை தெரிவித்தது.
இதன் காரணமாக யேமனில் ஹூதி படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபா் டிரம்ப் சனிக்கிழமை உத்தரவிட்டாா். செங்கடலில் ஹூதிக்களின் தாக்குதல் நிறுத்தப்படும் வரை, அவா்களுக்கு எதிராக அமெரிக்க தாக்குதல் நீடிக்கும் என்றும் அவா் கூறினாா்.
இதைத்தொடா்ந்து யேமனில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. இதில் யேமன் தலைநகா் சனா, ஹூதிக்களின் கோட்டையாகக் கருதப்படும் சடா ஆகிய பகுதிகளில் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமாா் 31 உயிரிழந்தனா்.
100-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா் என்று ஹூதிக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி அளிக்கப்படும் என்று ஹூதிக்கள் எச்சரித்துள்ளனா்.
யேமனில் ஹூதிக்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன் ஆகிய நாடுகள் கூட்டு சோ்ந்து ஏற்கெனவே தாக்குதல் மேற்கொண்டுள்ளன. ஆனால் தற்போது அமெரிக்கா மட்டுமே ஹூதிக்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது.