கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவையில் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 கொலை சம்பவங்கள் நடந்தன .இந்த சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து கோவை மாநகரில் ரவுடிகளின் நடவடிக்கைகளை ஒடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .அதன் ஒரு பகுதியாக மாநகரில் சிறப்பு வாகன சோதனை மற்றும் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாநகரின் வடக்கு மற்றும் தெற்கு காவல் எல்லைப் பகுதிகளில் ரவுடி செயல்களில் ஈடுபடும் நபர்களைப் பற்றிய கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. கோவை மாநகரின் தெற்கு காவல் நிலையம் எல்லையில் ரவுடி செயல்களில் ஈடுபட்டதாக இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 36 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. 19 ரவுடிகள்கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 5கத்திகள்,கஞ்சா பொட்டலங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கோவை மாநகரின் வடக்கு காவல் எல்லையில் ரவுடி செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது இதுவரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 28 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது .14 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 3 ரவுடிகளிடமிருந்து நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கோவை மாநகரில் ரவுடி செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது 64 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது .33 ரவுடிகள் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் காவல்துறையினரின் இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தி ரவுடி செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.