விசைத்தறி அதிபர் கொலையில் கூலி படையினைர் 4 பேர் கைது – தப்பி ஓட முயன்ற போது 2 பேர் கால்கள் முறிந்தது.!!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வாகராயம்பாளையம், விக்னேஸ்வரா காலனி சேர்ந்தவர் அமிர்தராஜ் ( வயது 47) விவசாயி. இவர் தனது முதல் மனைவியான ஆசிரியையாக பணிபுரிந்து வந்த விஜயா என்பவரை லாரி ஏற்றி கொலை செய்துவிட்டு அவர் விபத்தில் உயிரிழந்தது போல நாடகம் ஆடினார். இதற்கு அவரின் நண்பரான விசைத்தறி உரிமையாளர் இளங்கோவன் ( வயது 45 )உதவினார். அவருக்கு அதற்காக பணமும் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அமிர்தராஜ் தனது நண்பரான இளங்கோவனை தனது வீட்டிலேயே வாடகைக்கு குடியேற்றி வைத்தார். அவர் கலைவாணி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் .இந்த நிலையில் அமிர்தராஜன் முதல் மனைவியை லாரி ஏற்றி கொலை செய்ய உதவியாக இருந்த இளங்கோவன் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததுடன், அவர் வாடகைக்கு குடியிருந்த அந்த வீட்டை தனது பெயரில் எழுதிக் கொடுக்குமாறு அமிர்தராஜை மிரட்டினார் .அதை அவர் தனது மனைவி கலைவாணியிடம் தெரிவித்தார். இதனால் 2 பேரும் சேர்ந்து இளங்கோவனை கொலை செய்ய முடிவு செய்தனர். இதற்காக திண்டுக்கல்லை சேர்ந்த கூலிப்படை உதவியை நாடினர். இதற்காக 4 பேரை சந்தித்து ரூ.2 லட்சம் பேசி முதல் கட்டமாக ரூ. 50 ஆயிரம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 15 ஆம் தேதி கூலிப்படையை சேர்ந்த 4 பேர் வீட்டில் தனியாக இருந்த இளங்கோவனின் முகத்தில் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர்..இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி முதல் கட்டமாக அமிர்தராஜ் அவருடைய மனைவி கலைவாணி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் தப்பி ஓடிய கூலிப்படையை சேர்ந்த 4 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் சோமனூர் – ஊஞ்சபாளையம் ரோட்டில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 4 பேரும் போலீசாரை பார்த்ததும் மேம்பாலத்தில் இருந்து குதித்து தப்பி ஓடினர் .உடனே போலீசார் அந்த 4 பேரையும் விரட்டி சென்றனர் .அதில் 2 பேர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதிக்கும் போது அவர்களின் கால்கள் முறிந்தன. இதையடுத்து அந்த 2 பேர் உட்பட 4 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர் . அதில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, மைக்கேல் பாளையத்தைச் சேர்ந்த மைக்கேல் புஷ்பராஜ் (வயது 30) அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி ( வயது 23 )ராசு கோட்டூரை சேர்ந்த வீராசாமி ( வயது 46) மற்றும் 17 வயது சிறுவன் என தெரிய வந்தது .அவர்கள் 4 பேரும் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பதும் வீட்டில் தனியாக இருந்த இளங்கோவனை இவர்கள் 4 பேர் தான் வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்தனர். இதில் கால்கள் முறிந்த மைக்கேல் புஷ்பராஜ், ஆரோக்கியசாமி ஆகியோரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்ன 4 பேரையும் நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தி 3 பேரை கோவை மத்திய சிறையிலும், 17 வயது சிறுவனை சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்..