கோடநாடு கொலை – கொள்ளை வழக்கு விசாரணைக்காக 4 பேர் தனிப்படை முன் ஆஜர் !!!
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்குதாரராக இருந்தார். அவர் மறைவிற்குப் பின் 2017 ஏப்ரல் 24- ஆம் தேதி கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் பங்களாவில் கொலை செய்யப்பட்டார். அங்கு இருந்த சில முக்கியப் பொருட்கள் கொள்ளை போயின. கொலையில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் எடப்பாடியில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அடுத்து, காவலாளி கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்பட்ட சயான் குடும்பத்துடன் காரில் தப்பி செல்லும் போது விபத்திற்கு உள்ளாகி மனைவி மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்தனர். சயான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதே போன்று கோடநாடு எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அதே ஆண்டில், ஜூலை 5 ஆம் தேதி தற்கொலை செய்தார். 5 தொடர் மரணங்களை உள்ளடக்கிய கோடநாடு காவலாளி கொலை வழக்கு 10 பேர் மீது பதிவு செய்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று கோடநாடு கொலை வழக்கு விசாரணையில் மேலும் நான்கு பேருக்கு சமன் வழங்கப்பட்டது. கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில் ஓட்டுனராக பணி புரிந்து வந்த ரமேஷ், காய்கறிகள் வாங்கி கொடுக்கும் தேவன், கோவையைச் சேர்ந்த ரவிக்குமார், மற்றும் காருக்கு நம்பர் பிளேட் செய்து கொடுக்கும் அப்துல் காதர் ஆகிய நான்கு பேரையும் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் இன்று ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர். இன்று காலை 10:30 மணிக்கு நான்கு பேரும் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று காலை 10:30 மணி அளவில் 4 பேரும் கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜர் ஆகினர். இந்த நான்கு பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.