கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பசுமணி என்ற கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் அங்குள்ள நிலத்தில் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் கஞ்சா செடிகளை பயிரிட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் தாமோதரன், உதவி சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் போலீசாருடன் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்நிலத்தில் ஊடுபயிராக கஞ்சா செடிகளை பயிரிட்டு இருந்தது தெரியவந்தது .
இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது கஞ்சா செடிகளை பயிரிட்டது பசுமணி கிராமத்தில் வசிக்கும் செல்லன்(60), பழனிச்சாமி (60), ராஜப்பன் (33) வேலுச்சாமி (26) என்பது தெரிய வந்தது.இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அங்கு பயிரிடப்பட்ட 15.3 கிலோ எடை கொண்ட சுமார் 300 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். இதனை அறிந்த போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன சம்பவ இடத்திற்கு விரைந்து கஞ்சா செடிகளை பார்வையிட்டு, அக்கிராமத்தில் உள்ள பழங்குடி மக்களுக்கு போதைப்பொருளான கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:- சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காது அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.