கோவையில் பைனான்ஸ், ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி- தம்பதி உட்பட 4 பேர் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 56) இவரது மனைவி அன்னபூரணி ( வயது 46) தம்பி பாஸ்கர் (வயது 54) நண்பர் மணிகண்டன்ட
( வயது 52 )ஆகியோர் சேர்ந்து அண்ணாமலையார் அவென்யூ என்ற இடத்தில் ஆனைமலை சீட்ஸ், பொள்ளாச்சி பிரைவேட் லிமிடெட், அண்ணாமலையார் அன் கோ, அண்ணாமலையார் இன்வெஸ்ட்மென்ட், பைனான்ஸ்,ஸ்ரீ உண்ணாமலை அம்மன் பைனான்ஸ் ,அன்னபூரணி சிட்ஸ், சதாசிவம் சிட்ஸ் ஆகிய நிதி நிறுவனங்களை நடத்தி வந்தனர் .இங்கு முதலீடு செய்தவர்களுக்கு மாதந்தோறும் 18 சதவீதம் வட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது அதுபோன்று ஏலச்சீட்டும் நடத்தப்படும் என்று கூறியிருந்தார்கள்.

இதை அடுத்து பொள்ளாச்சி கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அத்துடன் பலர் ஏலச் சீட்டு போட்டனர். இந்த நிலையில் ஏலச்சீட்டுக்கான பணம் செலுத்திய பின்னர் குறிப்பிட்ட காலம் முடிந்த பின்னர் டெபாசிட் பணத்தையும், ஏலச் சீட்டுக்கா செலுத்திய பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் பணம் செலுத்தியவர்கள் அந்த நிறுவனங்களுக்கு சென்று முறையிட்டனர் . அவர்கள் பணத்தை கொடுக்கவில்லை .இதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் இந்த மோசடி தொடர்பாக கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அங்கு முதலீடு செய்த மற்றும் ஏலச்சீட்டு போட்டு பணம் செலுத்திய 350 க்கு மேற்பட்டவர்களிடம் ரூ 10 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நிதி நிறுவனங்களை நடத்தி வந்த சதாசிவம் ,அவரது மனைவி அன்னபூரணி, தம்பி பாஸ்கர், நண்பர் மணிகண்டன் ஆகியோர் மீது மோசடி, கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அந்த 4 பேரையும் நேற்று கைது செய்து கோவை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இந்த நிறுவனங்களில் வேறு யாராவது முதலீடு செய்து உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.