சென்னை: நடிகர் வடிவேலு, இசை அமைப்பாளர் தேவா, சின்னத்திரை நடிகர்கள் உள்பட 50 பேருக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் போலி டாக்டர் பட்டம் வழங்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள தனியார் அமைப்பு நிறுவனர் ஹரிஷை கைது செய்ய உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 26ம் தேதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் சார்பில் திரைப்பட நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, சின்னத்திரை நடிகர்கள் என 50 பேருக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்குவது போல், பல்கலைக்கழக முத்திரையுடன் டாக்டர் பட்டத்தை முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் வழங்கினார். பின்னர் அது போலியானது என்றும், டாக்டர் பட்டத்திற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் தெரியவந்தது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் மற்றும் பதிவாளர் ரவிக்குமார் கவனத்திற்கு வந்தது. உடனே போலி டாக்டர் பட்டம் வழங்கியது குறித்து பல்கலைக்கழக விசாரணை குழு விசாரணை நடத்திய போது, அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தை முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் பரிந்துரை செய்த கடிதத்தை கொடுத்து நிகழ்ச்சி நடத்த அனுமதி பெற்றது தெரியவந்தது. மேலும், கடிதத்தை ஆய்வு செய்த போது, அது முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் வழங்கியது போல் போலியான கையெழுத்து போட்டு அண்ணா பல்கலைக்கழக முதல்வரிடம் கொடுத்ததும் விசாரணையில் உறுதியானது.
அதைதொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ரவிக்குமார் கடந்த 1ம் தேதி கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்திய போது, அண்ணா பல்கலைக்கழகம் பெயரில் போலி டாக்டர் பட்டம் வழங்கியது தெரியவந்தது. பின்னர் சினிமா பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையத்தின் நிறுவனம் ஹரிஷ் மற்றும் அவரது அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மீது ஐபிசி 402, 420, 426, 468, 469, 471, 488 ஆகிய 7 பிரிவுகளின் கீழ் கோட்டூர்புரம் போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சென்னை கே.கே.நகர் காமராஜர் ெதருவை சேர்ந்த ஹரிஷ் என்பவரை கைது செய்ய அவரது வீட்டிற்கு போலீசார் சென்ற போது, அவர் தலைமறைவானது தெரியவந்தது. அவரை பிடிக்க கோட்டூர்புரம் உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். அதேநேரம், அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம் பெற்ற சினிமா பிரபலங்கள் உள்பட 50 பேரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.இதற்கிடையே முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் அளித்த புகாரின்படி மாம்பலம் போலீசார் ஹரிஷ் மீது வழக்கு பதிவு செய்வது குறித்து சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
* என் மீதான புகாரை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்: தலைமறைவாக உள்ள ஹரிஷ் வீடியோ மூலம் விளக்கம் என் மீதான புகாரை நான் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்று போலி பட்டம் வழங்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் நிறுவன ஹரிஷ், வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். தலைமறைவாக உள்ள ஹரிஷ் வீடியோவில் பேசியுள்ளதாவது: சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணைய இயக்குநராக உள்ளேன். கடந்த 26ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்திய நிகழ்ச்சி குறித்து தவறான தகவல் பரவி வருகிறது. விருது வழங்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று பரப்பப்படுகிறது. அதற்கான அனைத்து அதிகாரமும் நாங்கள் பெற்றுள்ளோம். டாக்டர் பட்டம் அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அது முற்றிலும் தவறு. இது அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி தான் தவிர மற்றப்படி எதுவும் கிடையாது. நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை. யாரும் அதிர்ச்சிடைய வேண்டாம். நம்பிக்கையாக இருப்போம். திரும்பி வந்து புகாரை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.