இருசக்கர வாகனத்தை வழிமறித்து நகை வியாபாரியிடம் ரூ.54 லட்சம் வழிப்பறி – 2 பேர் கைது.!!

கோவை மாவட்டம் கே.ஜி. சாவடி காவல் நிலைய பகுதியில் பாலக்காட்டை சேர்ந்த நகை வியாபாரி சுரேஷ் (வயது 45) கடந்த 8 – ந் தேதி வேலந்ததாவளம் அருகே இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர் சுரேசை கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ. 54 லட்சம் பணத்தை வழிப்பறி
செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.. இது குறித்து நகை வியாபாரி சுரேஷ் கே.ஜி சாவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இப்புகாரில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதன் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நாகேஷ் லக்ஷ்மணா மகன் சுமித் நாகேஷ் சலுங்கே (வயது 25) மற்றும் கோவிந்தன் சலுங்கே மகன் சனீஸ் கோவிந்தன் சலுங்கே (வயது 35) ஆகியோர்கள் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இந்நிலையில் தனிப்படையினர் மேற்படி நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ 41 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர் . இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் துரிதமாக துப்புத் துலக்கி கொள்ளையர்களை கைது செய்து பணத்தை மீட்ட தனி படையினரை போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் பாராட்டினார்..