மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு தொகையாக ரூ.1.39 லட்சம் கோடி ரூபாயை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கான பங்காக ரூ.5,700.44 கோடி ரூபாய் நிதி கிடைக்க உள்ளது.
மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி புதிதாக ஆட்சி அமைத்த முதல் நாளிலேயே மாநிலங்களுக்கான நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட ரூ.1,39,750 கோடி தொகை அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்து வழங்கப்படும். இதன் மூலம் மாநில அரசுகள் வளர்ச்சி மற்றும் மூலதனச் செலவுகளைத் துரிதப்படுத்த முடியும்.
2024-25 இடைக்கால பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு வரிகளை பகிர்ந்தளிக்க ரூ.12,19,783 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு பிப்ரவரியில், மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ.1.42 லட்சம் கோடி வரி பகிர்வு நிதியை அளித்தது. இப்போது வெளியிடப்பட்டுள்ள நிதியைச் சேர்ந்து இன்று வரை மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.2,79,500 கோடி நிதி வழங்கப்பட்டிருக்கிறது.