சென்னை: தெற்கு ரயில்வேயில் சூரிய ஒளிசாதனங்கள் மூலமாக, 58 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ரூ.2.70 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ரயில்வேயில் சூரிய ஒளி,காற்றாலை ஆகியவற்றின் மூலமாகமின்னுற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தெற்குரயில்வேயில் மொத்தம் 5.07 மெகாவாட் திறன் கொண்ட சூரியஒளி மின்னுற்பத்தி கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன் மூலமாக, கடந்த 2021-22-ம் ஆண்டில் 5.47 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இதன்மூலம் சுமார் ரூ.2.3 கோடி சேமிக்கப்பட்டது. தற்போது, சூரிய ஒளி மூலமாக மின்னுற்பத்தி மேலும் அதிகரித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் நிலையங்களில் மேற்கூரைகள், அலுவலகங்கள், பணிமனைகள், தொழிற்சாலைகளில் சூரிய ஒளி மின்தகடுகள் பொருத்தி, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தெற்கு ரயில்வேயில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம் உட்பட 6 கோட்டங்களில் 6 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் மின்சாரத் தேவையை, இதன் வாயிலாகப் பூர்த்தி செய்கிறோம். சூரியஒளி மூலமாக, 2022-23-ல் 58 லட்சம்யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ.2.7கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் தற்போது வரை1,215 ரயில் நிலையங்களில் மேற்கூரைகளில் சூரிய ஒளி மின்தகடுகள் நிறுவப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயிலும் பல்வேறு இடங்களில் சோலார் பேனல் நிறுவி மின்உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இதை மேலும் அதிகரிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
காற்றாலை மின் உற்பத்தி: இதேபோல், தெற்கு ரயில்வேயில் 10.5 மெகாவாட் திறன்கொண்ட காற்றாலை மின்னுற்பத்தி கூடம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலமாக, 2022-23-ம் நிதியாண்டில் 250 லட்சம் யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் மூலம் ரூ.13.70 கோடி சேமிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.