கோவை : சூலூர் போலீஸ் நிலைய வளாகத்தில் துப்பறியும் மோப்பநாய் பிரிவு இயங்கி வருகிறது. இந்தப் பிரிவின் மேம்படுத்தப்பட்ட வளாகத்தை கோவை மண்டல டி.ஐ.ஜி முத்துசாமி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அங்குள்ள மோப்ப நாய் பிரிவை ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மோப்ப நாய்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதனை அடுத்து மோப்பநாய் பிரிவில் சுகாதாரம் மற்றும் வளாகத்தின் தூய்மை ஆகியவற்றை குறித்து எடுத்து கூறினார். இதேபோன்று சூலூர் வட்ட போலீஸ் நிலையத்தில் கடந்த 21-ந் தேதி மலுமிச்சம்பட்டி அவ்வை நகர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த வீடு புகுந்த 7 பேர், மாணவர்களை கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்த 5 லேப்டாப், 12 செல்போன்கள், மாணவர்கள் அணிந்திருந்த தங்கச்செயின் தங்க மோதிரம் உள்ளிட்ட 4 பவுன், மாணவர்கள் அணிந்திருந்த கைக்கடிகாரம், விலை உயர்ந்த காது ஒலி கருவிகள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதனை அடுத்து கோவை மாவட்ட பொறுப்பு மற்றும் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாசன்க் சாய் உத்தரவின் பேரில் சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திர பிரசாத், சரவணன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்குள்ள கண்காணிப்பு காமிராக்களின் உதவியுடன் திருட்டில் ஈடுப்பட்டவர்களை அடையாளம் கண்டறிந்தனர். அப்போது இந்த கொள்ளையில் ஈடுபட்டது அப்பகுதியில் உள்ள சில கல்லூரி மாணவர்கள் என தெரியவந்தது.
இதனையடுத்து மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த கோகுல் ரோஷன் (21), மதன் (20) விஷ்வா (20), கவுதம் (20), விக்னேஷ் (25), அவிநேஷ்(20) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர். அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து திருடப்பட்ட பொருட்களை கைப்பற்றினர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்த போலீசாருக்கு டி.ஐ.ஜி முத்துசாமி பாராட்டி வெகுமதி வழங்கினார்.