கோவை மாவட்டத்தில் 2023ம் ஆண்டை விட அதிகளவில் 2024ம் ஆண்டு 13 தீயணைப்பு நிலையங்களுக்கு 7192 அழைப்புகள் வந்துள்ளது. அதில் பாம்புகளை மீட்க வந்த அழைப்புகள் கூடுதல் என தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மாவட்ட அலுவலர் தெரிவித்தார்.கோவையில் தீயணைப்புத்துறையில் மாநகரில் தெற்கு, வடக்கு, பீளமேடு, கோவை புதூர், கணபதி மற்றும் புறநகரில் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை என, 13 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் உள்ளன. இங்கு வரும் அழைப்புகளின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடங்களுக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பேரிடர் காலங்கள், தீபாவளி முன் எச்சரிக்கை குறித்தும் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு தீ தடுப்பு குறித்தும் அடிக்கடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மீட்புப் பணி மற்றும் தீயணைப்பு தொடர்பாக கோவை மாவட்டத்தில் உள்ள, 13 தீயணைப்பு நிலையங்களுக்கும் சேர்த்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 7192 அழைப்புகள் வந்துள்ளது.
இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மாவட்ட அலுவலர் புளுகாண்டி கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் உள்ள தெற்கு, வடக்கு, கணபதி, பீளமேடு, தொண்டாமுத்தூர், கோவை புதூர், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், அன்னூர், சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய, 13 தீயணைப்பு நிலையங்களிலும் சேர்த்து கடந்த, 2024ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை மொத்தம், 7192 அழைப்புகள் வந்துள்ளன. இது 2023ம் ஆண்டை விட அதிகம். 2023ம் ஆண்டு 6684 அழைப்புகள் வந்திருந்தது. தீ விபத்துகளை சிறிய, நடுத்தர, பெரிய என வகைப்படுத்தப்பட்டுள்ளது. லட்ச ரூபாய்க்கு மேல் பாதிப்பு வந்தாலோ அல்லது மனித உயிரிழப்பு ஏற்பட்டாலோ அவை தீவிர தீவிபத்துகளாக எடுத்துக் கொள்ளப்படும்.
அதன்படி அன்னூர், போத்தனூரை அடுத்த வெள்ளலூர் குப்பை கிடங்கு, கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் தீவிர தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது. சிறிய தீ விபத்துகள், நடுத்தர தீ விபத்துகள், தீவிர தீவிபத்துகள் 3 வகைகளையும் சேர்த்து மொத்தம் 1594 தீ விபத்து சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. அதாவது, 1594 தீவிபத்து, அழைப்புகள் வந்துள்ளது.
அதேபோல, மனிதர்கள், கால்நடைகள், பாம்புகள் மீட்பு தொடர்பாக, 5598 அழைப்புகள் வந்துள்ளது. கடந்த 2023ம் அண்டு 4998 அழைப்புகள் வந்திருந்தது. இந்த, 5598 அழைப்புகளில், அதிகமான அழைப்புகள் பாம்புகளை மீட்க வந்த அழைப்புகளாகும். கடந்த காலங்களில் பொதுமக்கள் பாம்பை பார்த்தால் உடனே அடித்து கொன்று விடுவார்கள். ஆனால் தற்போது பெரும்பாலானோர் விழிப்புணர்வு அடைந்து உள்ளனர். அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கோ, பாம்பு பிடி வீரர்களுக்கோ தகவல் தெரிவித்து விடுகின்றனர். பாம்பை கொல்லாமல் அதன் உயிரை காப்பாற்ற உதவும் பொதுமக்களை பாராட்டுகிறோம்.
கோவை மாவட்டத்தில் 13 தீயணைப்பு நிலையங்களிலும் அதிகாரிகள் உட்பட 270 தீயணைப்பு வீரர்கள் உள்ளனர். தீயணைப்பு நிலையங்களுக்கு அழைப்பு வந்தால் ஒரு நிமிடத்தில் விவரங்கள் பெறப்படும். ஒரு கிலோ மீட்டர் தூரத்தை ஒரு நிமிடத்தில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது அரசு வழங்கி உள்ள ஸ்கை லிப்ட் வாகனம் (வான் நோக்கி நகரும் ஊர்தி) மூலம் தீவிபத்துகளை மேலும் தடுக்க முடியும். ஸ்கை லிப்ட் வாகனத்தில் 54 மீட்டர் உயரம் வரை சென்று மீட்பு பணியில் ஈடுபடலாம். கோவையில் 54 மீட்டருக்கு அதிகமான உயரம் கொண்ட கட்டிடங்கள் இல்லை. எங்காவது தீ விபத்து ஏற்பட்டால் உடனே சென்று அணைக்க போதுமான அளவு தண்ணீர் உடன் அனைத்த தீயணைப்பு நிலையங்களிலும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கூடுதல் தேவை எற்பட்டால் மாநகராட்சி மற்றும் தனியாரிடம் உடனே தண்ணீர் பெறப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தீவிபத்து மூலம் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்பட வில்லை.இவ்வாறு அவர் கூறினார்.