டெல்லி: பிரமதர் மோடியுடன் இன்று 72 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள நிலையில், இன்னும் எத்தனை பேர் வரை அமைச்சரவையில் இடம் பெறலாம்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத போதிலும் பாஜக 240 சீட்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அவர்கள் என்டிஏ கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவு”ன் ஆட்சியை அமைத்தனர்.. இதையடுத்து இன்று பிரமதர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது.
ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்கும் ஒரே தலைவர் என்ற சாதனையைப் பிரதமர் மோடி படைத்தார். அவருடன் சேர்த்து மொத்தம் 72 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். பிரதமர் தவிர்த்துப் பார்க்கும் போது அவர்களில் 30 பேர் கேபினட் அமைச்சர்கள், 5 பேர் தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், 36 பேர் இணை அமைச்சர்கள் ஆவர். மேலும், கட்சி வாரியாக பார்க்கும் போது அவர்களில் 61 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள்.. மற்றவர்கள் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மத்திய அமைச்சரவையில் அதிகபட்சமாக 81 பேர் இருக்கலாம் என்ற நிலையில், இப்போது மொத்தம் 72 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். ஏன் அதிகபட்சம் 81 பேர் மட்டும் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்க வேண்டும்.. கடந்த கால மோடி அமைச்சரவையில் எத்தனை பேர் அமைச்சர்களாக இருந்துள்ளனர் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அரசியலமைப்பு (91வது திருத்தம்) சட்டம், 2003, இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகளில் அதிகபட்சம் எத்தனை அமைச்சர்கள் இருக்கலாம் என்பதைக் குறிப்பிடுகிறது. பிரதமர் உட்பட மத்திய அமைச்சரவையில் உள்ளவர்களின் எண்ணிக்கை லோக்சபா மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15% தாண்டக் கூடாது என்பதை இந்த சட்டம் தெளிவாகச் சொல்கிறது.
அதன்படி லோக்சபாவில் 543 பேர் இருக்கும் நிலையில், அதிகபட்சமாகப் பிரதமருடன் சேர்த்து 81 அமைச்சர்கள் இருக்கலாம். அரசியல் நலனுக்காக அதிக பேருக்கு அமைச்சர் பதவிகளைக் கொடுப்பதைத் தடுக்கவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில சமயம் ஒரே அமைச்சர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளைக் கவனிக்க வேண்டி இருக்கிறது.
அதிகபட்ச அமைச்சர்கள் எண்ணிக்கையில் தான் லிமிட் உள்ளதே தவிர.. எத்தனை துறைகள் இருக்க வேண்டும் என்பதற்கு லிமிட் இல்லை. அரசின் கொள்கை, தேவை அடிப்படையில் புதிய அமைச்சகங்களை உருவாக்கலாம் அல்லது கலைக்கலாம்.
2014 தேர்தலுக்குப் பிறகு, மோடி முதலில் பிரதமராகப் பதவியேற்ற போது அவருடன் 23 கேபினட் அமைச்சர்கள், 10 தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் மற்றும் 12 இணை அமைச்சர்கள் உட்பட 45 பேர் மட்டுமே அமைச்சர்களாகப் பதவியேற்றனர். சுமார் ஆறு மாதங்கள் கழித்து 2014 நவம்பர் 9இல் புதிதாக 21 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்ற நிலையில், மொத்த அமைச்சர்கள் எண்ணிக்கை 66ஆக உயர்ந்தது. அடுத்தடுத்து ஆண்டுகளில் அமைச்சரவை மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
2019 லோக்சபா தேர்தலுக்குப் பிறகு தொடக்கத்தில் 24 கேபினட் அமைச்சர்கள், 9 தனி பொறுப்புடன் கூடிய கூடிய அமைச்சர்கள் மற்றும் 25 இணை அமைச்சர்கள் என 58 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். இருப்பினும், தேர்தலுக்கு முன்பு 29 கேபினட் அமைச்சர்கள், 3 தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் மற்றும் 42 மாநில அமைச்சர்கள் இருந்தனர்.