காஸ் சிலிண்டர் வெடிப்பில் பலியானவரின் வீட்டில் 75 கிலோ வெடிபொருள் சிக்கியது -போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி..!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டி எடுத்தார் .அப்போது அவர் கூறியதாவது:- கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றி வந்த கார் அதிகாலை 4 மணி அளவில் வெடித்து சிதறியதில் அந்த கார் ஓட்டி வந்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி அதே இடத்தில் பலியானார் .அதன் தொடர்ச்சியாக உக்கடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து உக்கடம் சாக உதவி போலீஸ் கமிஷனர் வீரபாண்டி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது .பின்னர் அந்தபகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தடயவியல் வல்லுநர்கள் மோப்பநாய் பிரிவு மற்றும் அறிவியல் ரீதியாக அனைத்து புலனாய்வு பிரிவும் வரவழைக்கப்பட்ட சோதனை தீவிர படுத்தப்பட்டது . அந்த கார் யார் பெயரில் வாங்கப்பட்டது? என்பது குறித்து விசாரித்ததில் அது 10 பேர்களின் கை மாறி வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தி கார் எங்கிருந்து வந்தது ?என்றும் இறந்தவரின் பெயர் விவரத்தையும் 12 மணி நேரத்துக்குள் கண்டறியப்பட்டது. இதை யடுத்து நீதிமன்ற அனுமதியுடன் இறந்தவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது .

 

அதில் பொட்டாசியம் நைட்ரேட், சார்கோல் ,அலுமினியம் பவுடர், சல்பர் உள்பட 75 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.எனது நேரடி மேற்பார்வையில் துணை போலீஸ் கமிஷனர், உதவி கமிஷனர் வீரபாண்டி தலைமையில் 5இன்ஸ்பெக்டர் கொண்ட தனிப்படை அமைத்து சந்தேகத்தின் அடிப்படையில் 22 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சம்பவ இடத்தை டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர்.இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேர் நேற்று முன்தினம் இரவில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சந்தேக மரணம் மற்றும் வெடிபொருள்கள் சட்டம் ஆகிய பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் தொடர்புடையவர்கள் கைது செய்துள்ளனர். தற்போது அந்த வழக்கு மாற்றப்பட்டு அவர்கள் மீது கூட்டுசதி, மற்றும் இரு பிரிவினர்களிடையே விரோதத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சந்தேக படக்கூடியவர்களின் வீட்டைசோதனை செய்தும் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 20 அடி தூரத்தில் சோதனை சாவடியில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் அதிகாலை 3.30 மணியளவில் கோவிலுக்கு சென்று கண்காணிப்பு பணி செய்து சென்றனர். போலீசார் அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்புக்கு நின்றிருந்ததால் கார் அந்த இடத்தில் வெடித்திருக்கலாம் என்றால் சந்தேகம் ஏற்படுகிறது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் ஒரு சிலர் கேரள சிறைக்கு சென்று வந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் கேரளா சிறைக்கு சென்று யாரை சந்தித்தார்கள்? என்பது குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகிறோம். கைதானவர்களிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை ( என்.ஐ.ஏ) விசாரணை நடத்தப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது .கைதான ரியாஸ், நவாஸ் மற்றும் பிரோஸ் ஆகியோர் முபின் வீட்டில் இருந்து சிலிண்டர்கள் மற்றும் வெடி மருந்துகள் ஏற்றுவதற்கு உதவி செய்து இருக்கிறார்கள் .ஒருவர் கார் கொடுத்துள்ளார் ஒருவர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டிருந்தார் .இந்த வழக்கில் கைதான முகமது தல்கா என்பவர் கடந்த 1998 ஆம் ஆண்டு கோவையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் ஏற்கனவே கைதான பாட்ஷாவின் உறவினர் என்பது தெரிய வருகிறது .இவ்வாறு அவர் கூறினார்.