நிதி நிறுவனம் நடத்தி ரூபாய் 8 கோடி மோசடி: கைதானவர் குறித்து பரபரப்பு தகவல்
கோவை, சரவணம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி. இவர் பீளமேடு, நவ இந்தியாவில் எல்.ஜி மார்க்கெட்டிங் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார். திருப்பூர் மாவட்டத்தில் முன்னோடி வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ராஜகோபால் என்பவரை அணுகி ஓய்வு பெற்ற பணத்தை தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால். அதிக லாபம் மற்றும் வட்டி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். மேலும் இணையதளத்தில் ஒரு டிஜிட்டல் கணக்கை தொடங்கி ரகசிய குறியீடு எண்ணை கொடுத்து அதன் மூலம் பண பரிவர்த்தனைகளை பார்த்துக் கொள்ளலாம் என்று நம்பும் அளவிற்கு பேசி உள்ளார். இதை நம்பி ராஜகோபால் இந்த நிறுவனத்தில் ரூபாய் 27 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். இதுபோல் சென்னையில் சேர்ந்த பலரும் கிருஷ்ணமூர்த்தியிடம் முதலீடு செய்தனர். அவர் ரூபாய் 2 கோடியே 70 லட்சத்து 20 ஆயிரம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி இருப்பதாக பலரும் புகார் செய்தனர். கோவை நகர குற்றப்பிரிவு போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து புகார்கள் வந்ததை தொடர்ந்து நீதிமன்ற அனுமதி பெற்று கிருஷ்ணமூர்த்தியை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்பொழுது மொத்தம் 44 பேரிடம் கிருஷ்ணமூர்த்தி ரூபாய் 8 கோடி வரை மோசடி செய்து இருப்பது கண்டறியப்பட்டது. கிருஷ்ணமூர்த்தி பல்வேறு வங்கிகளில் வைத்து இருந்த வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு, ரூபாய் 5 லட்சத்து 3 ஆயிரம் பணத்தை போலீசார் முடக்கி வைத்தனர். மேலும் சரவணம்பட்டியில் உள்ள கிருஷ்ணமூர்த்திக்கு சொந்தமான வீட்டில் சோதனை நடத்தி மோசடி தொடர்பான ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீஸ் காவல் முடிந்து கிருஷ்ணமூர்த்தி சிறையில் அடைக்கப்பட்டார்.