வியாபாரியை தாக்கி 2 கிலோ தங்க நகை கொள்ளை வழக்கில் 8 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை..!

கோவை ஆர். எஸ். புரம். பகுதியைச் சேர்ந்தவர் டி. ஆர். பாலாஜி. நகை வியாபாரி . இவர் வட மாநிலங்களில் இருந்து தங்கக் கட்டிகளை வாங்கி வந்து கோவையில் நகைகளாக வடிவமைத்து மீண்டும் வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் தொழில் செய்து வருகிறார். அவர் கடந்த 6 – 2 – 2003 அன்று இரவு 8 மணி அளவில் 2 கிலோ 150 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை ஒரு பையில் வைத்துக் கொண்டு கோவை ரயில் நிலையத்தை நோக்கி குட்ஷெட் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த ஒரு கும்பல் திடீரென்று அவரை வழிமறித்து கத்தி முனையில் சரமரியாக தாக்கி 2 கிலோ நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர். இது தொடர்பாக வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கோவை செல்வபுரம் பொன்னையராஜபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் ( 54 ) ரவிசங்கர் (49) மோகன் குமார் (50) பத்மநாபன் ( 53 ) முருகன் (44 )ஜாவித் உஸ்மான் மைதீன் ( 49 ) விஸ்வநாதன் (53) ஸ்ரீராம் எம். முருகன் (58) ஆகிய 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகைகளையும் வழிப்பறி செய்ய பயன்படுத்த மோட்டார் சைக்கிள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போது ஜாவித் ,ஸ்ரீராம் ஆகியோர் இறந்துவிட்டனர் இதனால் மற்ற 8 பேர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கலைவாணி குற்றம் சாட்டப்பட்ட 8 பேருக்கும் 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி வாதாடினார்..