800 கிலோ எடை.. இஞ்ச் பை இஞ்ச்சாக 7 கிலோ மீட்டர்’ நடை.. மின்மாற்றியை மலைமீது தூக்கிச் செல்லும் மக்கள்.!!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அமைந்திருக்கிறது போதமலை. 3,600 அடி உயரம்கொண்ட இந்த மலையில், கீழூர், மேலூர் மற்றும் கிடமலை உள்ளிட்ட மூன்று மலைக்கிராமங்கள் இருக்கின்றன.

இங்கு 2,500-க்கும் அதிகமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அந்தக் கிராமங்களுக்கு கீழிலிருந்து சென்றுவர முறையான சாலை வசதி கிடையாது. கரடுமுரடான ஒற்றையடி மாதிரியான தடத்தில்தான் நடந்து செல்ல வேண்டும்.

இந்த நிலையில், இந்த மக்களின் பல ஆண்டு கோரிக்கையை ஏற்று, இந்த மலைக்கிராமங்களுக்குச் சாலை அமைக்க, அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், இந்த மலைக்கிராமங்களிலுள்ள குடியிருப்புகளுக்கு 2006-ம் ஆண்டு மின்சார வசதி ஏற்படுத்தி தரப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இந்தக் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கிகொண்டிருந்த, கீழூரில் இருந்த மின்மாற்றி பழுதானது. இதனால், மூன்று கிராமங்களும் மின்சாரமின்றி இருளில் மூழ்கின. மக்கள் பல்வேறு சிரமத்துக்கு உள்ளானார்கள். இந்த நிலையில், புதிய மின்மாற்றி அமைக்க, புதிய மின்மாற்றியை மலை அடிவாரத்துக்குக் கொண்டுவந்து தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் வைத்துவிட்டனர். மேலே கொண்டுசெல்ல அவர்களுக்கு வழி தெரியாததால், இரண்டு நாள்களாக அடிவாரத்திலேயே இருந்தது.

இந்த நிலையில், அந்த மின்மாற்றியை மேலே கொண்டுசெல்ல மலைக்கிராமங்களைச் சேர்ந்த ஆண்களே களத்தில் இறங்கினர். அந்த மின்மாற்றியைச் சுற்றி மூங்கில் கம்புகளால் கட்டி அதைத் தோளில், தலையில் என 30-க்கும் மேற்பட்ட ஆண்கள் தூக்கியபடி இன்று மலையேறத் தொடங்கினர். கரடுமுரடாக, செங்குத்தாக ஏற வேண்டியிருப்பதால், 800 கிலோ எடைகொண்ட அந்த மின்மாற்றியை மிகுந்த சிரமத்துடன் தூக்கிச் செல்கின்றனர். மலைமீது இருக்கும் கீழூருக்கு 7 கிலோமீட்டர் தொலைவுக்கு மலைவாழ் மக்கள் அதைச் சுமந்து செல்கின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள், “இந்தப் புதிய மின்மாற்றியானது மூன்று அல்லது நான்கு நாள்களுக்குள் மேலே சென்றுவிடும். அதன் பிறகு, அதை அங்கு பொருத்தி மின்சார இணைப்பு வழங்கப்படும்” என்று தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நிலையில், அந்த மலைக்கிராமங்களைச் சேர்ந்த மக்களோ, “இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் நாங்கள் 7 கிலோமீட்டர் தூரம் நடந்தே கடந்துதான் மலையடிவாரத்துக்கோ அல்லது மறுபடியும் மலைமீது இருக்கும் எங்கள் கிராமங்களுக்கு வரவேண்டியிருக்கிறது. இந்த நிலையில், இப்படி மின்மாற்றி திடீரென்று பழுதாகி, ஒருமாதமாக மின்சார வசதி இல்லாமல் அல்லாடுறோம். அதனால், புதிய மின்மாற்றி வந்த பிறகும், அதை எப்படி மேலே தூக்கிப்போவது என்று தெரியாமல் குழப்பம் ஏற்பட்டது. கடவுள்மீது பாரத்தைப் போட்டுவிட்டு, தற்போது அதை தூக்கிக்கொண்டு போகிறோம்.

ரொம்ப சிரமப்பட்டுதான் அதை இஞ்ச் பை இஞ்ச் தூரமாக கடந்து கொண்டிருக்கிறோம். 800 கிலோ எடை என்பதால், கொஞ்சம் பிசகினாலும் மேலே விழுந்து பிரச்னையாயிரும். கரணம் தப்பினால் மரணம் என்று தூக்கிக்கொண்டு போகிறோம். கழிகளும் முறியாமல் இருக்க வேண்டுமே என்று கடவுளை வேண்டிக்கொண்டு போகிறோம். இந்த நிலை தொடராமல் இருக்க, விரைவில் அரசு எங்கள் கிராமங்களுக்குச் சாலை வசதி செய்து தர வேண்டும்” என்றார்கள்.